

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து எடுத்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் நவ. 3-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய உயர்கல்வி்த்துறை அமைச்சர் பொன்முடி, ரூ. 1.36 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாகக்கூறி கடந்த 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வேலூர் நீதிமன்ற தீர்ப்பு: இந்த வழக்கில் இருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோரை விடுதலை செய்து வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி தரப்பில்ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். எனவே இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இம்மாத கடைசியில் விசாரணை... இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, இந்த வழக்கில் வேலூர் நீதி மன்றம் பிறப்பித்த தீர்ப்பின் நகல் மொழி பெயர்க்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அந்த வழக்கு இம்மாத கடைசியில் விசாரணைக்கு வரவுள்ளது என்றார். அதையடுத்து நீதிபதி வழக்கு விசார ணையை வரும் நவ.3-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.