பங்காரு அடிகளார் மறைவு முதல் காசா நிலவரம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.19, 2023

பங்காரு அடிகளார் மறைவு முதல் காசா நிலவரம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.19, 2023
Updated on
2 min read

ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவு: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

1970-களின் தொடக்கம் முதல் சக்தி பீடத்தை நிறுவி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லிவந்த பங்காரு அடிகளார், ஆன்மிகத்துடன் சமுதாய தொண்டையும் செய்துவந்தவர். 1978-ல் முதன்முதலாக காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தைத் தொடக்கி வைத்தார். இன்றுவரை 2,500-க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்களும், 25-க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களும் மேல்மருவத்தூர் சித்தா் பீடத்துக்கு தொண்டாற்றி வருகின்றன.

பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களும் அவரை 'அம்மா' என்று அழைத்துவந்தனர். மேல்மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். பங்காரு அடிகளார் ஆற்றிய சேவைக்காக மத்திய அரசு அவருக்கு 2019-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிதத்து என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, `மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் சாட்சியைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது’ எனக் கூறி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அடுத்த 3 நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம்: "வடகிழக்குப் பருவமழை அடுத்து வரும் மூன்று தினங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் துவங்கும். தற்போது அரபிக் கடல் பகுதியில், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. மேலும், வங்கக் கடல் பகுதியில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் 21-ம் தேதியை ஒட்டி துவங்கக்கூடும். இந்த இரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளின் காரணமாக, துவக்க நிலையில் வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியப் பகுதிகளில் வலு குறைந்து காணப்படும்" என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார் .

“செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அதிகார துஷ்பிரயோகம்”: "திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசு இயந்திரத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. திமுகவின் தனிப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புகள் பலவும் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வாயிலாக வெளியாகின்றன" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி சில பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

தேவர் ஜெயந்திக்கு வாடகை வாகனங்களில் செல்ல தடை: பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

“நக்சலிசத்தை காங்கிரஸ் ஊக்குவிக்கிறது” - அமித் ஷா: நக்சலிசத்தை காங்கிரஸ் கட்சி ஊக்குவிப்பதாக சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.

கேசிஆருக்கு மட்டும் விதிவிலக்கு ஏன்? - ராகுல் கேள்வி: தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி "எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் வருமான வரித் துறையைப் பயன்படுத்தி பாஜக வழக்குகள் பதிந்து வருகிறது. ஆனால், கேசிஆர் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளார். தெலங்கானா முதல்வர் கேசிஆருக்கு எதிராக சிபிஐ அல்லது அமலாக்கத் துறை வழக்குகள் பதியாதது கேள்விகளை எழுப்புகிறது” என்று பேசினார்.

ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டிய பதிவுத் துறை: சுபமுகூர்த்த தினமான நேற்று (அக்.18) ஒரே நாளில் மட்டும் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக, தமிழக வணிக வரி மற்றும் பதிவுத் துறை தெரிவித்துள்ளது. வரும் 20-ம் தேதியும் கூடுதலான முன்பதிவு டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: இந்தியாவின் வலியுறுத்தல்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான மோதலில், மனிதாபிமான சட்டம் கடுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, காசா பகுதியில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதில், மருத்துவமனையில் இருந்த சுமார் 500 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் காரணமில்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

“இஸ்ரேலுக்கு இங்கிலாந்து முழு ஆதரவு” - ரிஷி சுனக்: ஹமாஸுக்கு எதிரான மோதலில் இஸ்ரேல் வெற்றி பெற இங்கிலாந்து விரும்புவதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பயணம் மேற்கொண்ட அவர், ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டார்.

இதனிடையே, காசாவில் பிணைக் கைதிகளாக 203 பேர் இருப்பதாகவும், ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 306 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அதேபோல், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் முதல் பெண் தலைவர் ஜமிலா அப்துல்லா தாஹா அல் சான்டி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்திருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in