“கஜினி முகமது போல ஜாமீன் கேட்டு படையெடுக்கிறார் செந்தில் பாலாஜி” - ஜெயக்குமார்

“கஜினி முகமது போல ஜாமீன் கேட்டு படையெடுக்கிறார் செந்தில் பாலாஜி” - ஜெயக்குமார்
Updated on
1 min read

சென்னை: “அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு கஜினி முகமது போல படையெடுக்கிறார்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். விமர்சித்திருக்கிறார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் டெங்கு தலைவிரித்து ஆடுகிறது. அரசு மருத்துவமனைகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். ஆனால், மக்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில்தான் திமுக அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. சுகாதாரத் துறை அமைச்சர் ஓர் ஓட்டப்பந்தய வீரராகத்தான் இருக்கிறார். மருத்துவத் துறையில் தவறுகள் அதிகளவில் நடக்கின்றன. தவறுகள் நடக்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழகத்தை சுகாதாரமான மாநிலமாக வைத்திருக்கும் எண்ணம், திமுகவுக்கு கிடையாது” என்றார்.

செந்தில் பாலாஜி குறித்து கூறும்போது, “கஜினி முகமதுகூட தோற்றுவிடுவார் போல. கஜினி முகமது போல படையெடுத்து ஜாமீன் ஜாமீன் என கேட்டு, ஒரு நெத்திலி மீன் கூட கிடைக்காத நிலைதான் இருக்கிறது. நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது. அது நீதி வடிவில் இருக்கிறது” என்றார்.

மேலும், “திமுக அரசு நாங்கள் கையெழுத்து போட்டால் நீட் தேர்வு காலி என்று கூறியது. அந்த சூட்சமம் எங்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று கூறியது. திமுக அரசு மக்களை வஞ்சிக்கிற அரசாக இருக்கிறது. மக்களை பற்றியும், நிர்வாகத்தை பற்றியும் கவலை இல்லை. இது விளம்பர அரசாக இருக்கிறது. மின்கட்டணம் உயர்ந்திருக்கிறது. கல்விக் கடனை ரத்து செய்யவில்லை. இதுபோன்ற பல விஷயங்களை கூறலாம்” என்றார்.

இதனிடையே, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in