

சென்னை: தமிழகத்தில் நடந்த வருமான வரிச் சோதனையில் ரூ.60 கோடி மதிப்பிலான நகை, ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த5-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனையில் ரூ.60கோடி மதிப்பிலான நகை, ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை முதன்மை ஆணையரும், அத்துறையின் செய்தி தொடர்பாளருமான சுரபி அலுவாலியா, புதுடெல்லியில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஓட்டல்கள், மதுபான ஆலைகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 5-ம் தேதி தொழிற் கல்வி நிறுவனங்கள், தொடர்புடைய மருத்துவமனைகள், ஓட்டல்கள், மதுபான ஆலைகள் உள்ளிட்ட 100 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில், பல முக்கிய ஆவணங்கள், கோப்புகள், டிஜிட்டல் தரவுகள் உள்ளிட்ட ஏராளமான குற்றச்சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடையே பெறப்பட்ட கட்டணங்களை, கணக்கு புத்தகங்களில் முறையாக பதிவு செய்யாமல், கட்டண ரசீதுகளை மறைத்து வைத்திருந்ததும், போலியான ஆவணங்கள் மூலம் கல்வி உதவித்தொகை கோரியதும் தெரியவந்தது.
முக்கிய ஆதாரங்கள் சிக்கின: மேலும், கணக்கில் வராத ரூ.400 கோடிக்கும் அதிகமான கட்டண ரசீதுகளும், ரூ.25 கோடி மதிப்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் மற்றும் சான்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், ஏஜென்ட்கள் மூலம் கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்கள் திரட்டப்பட்டதும், இதற்காக கணக்கில் காட்டப்படாத ரூ.25 கோடி கமிஷன் தொகை வசூல் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளன.
அதேபோல், மற்றொரு குழு மதுபான ஆலைகளில் நடத்தப்பட்ட சோதனையில், மதுபான ஆலைகளில் போலி வரவு செலவுமூலம் ரூ.500 கோடி முறைகேட் டில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. மேலும், கணக்கில் காட்டப்படாத ரூ.300 கோடி, அறக்கட்டளை வங்கி கணக்கில் இருந்து, தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. இதில், ஆந்திராவில் உள்ள ஒரு தொழில் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காக பணம் செலுத்தப்பட்டிருப்பதும் அடங்கும். இதுவரை நடந்த சோதனையில் ரூ.32 கோடி பணம், ரூ.28 கோடி மதிப்புள்ள தங்கம் என ரூ.60 கோடி மதிப்பிலான பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்: தமிழகத்தில் அரக்கோணம் தொகுதி திமுக எம்பியும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன் வீடு, அவர் தொடர்புடைய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், நட்சத்திர ஓட்டல், மதுபான ஆலைகள், மகள், மருமகனுக்கு சொந்தமான நிறுவனங்கள் என 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 5-ம் தேதி முதல் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.