

ஈரோடு: பள்ளிக் கல்வித் துறை முன்னாள் இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரியச் செயலருமான ராமேஸ்வர முருகனின் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியச் செயலராகப் பொறுப்பு வகிப்பவர் ராமேஸ்வர முருகன் (55). இவரது சொந்த ஊர் ஈரோடுமாவட்டம் கோபியை அடுத்த வெள்ளாங்கோவில் ஆகும். அங்கு அவரது பெற்றோர் சின்னசாமி-மங்கையர்க்கரசி வசித்து வருகின்றனர்.
சென்னையில் வசிக்கும் ராமேஸ்வர முருகன், அவ்வப்போது வெள்ளாங்கோவில் சென்று, பெற்றோரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று காலை ஈரோடு லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார், வெள்ளாங்கோவில் சென்று, ராமேஸ்வர முருகன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். மாலை வரை சோதனை நீடித்தது.
ராமேஸ்வர முருகனின் மாமனார் அறிவுடைநம்பி வீடு, ஈரோடு அக்ரஹார வீதியில் உள்ளது. இவர் அதே பகுதியில் நகைக் கடை வைத்துள்ளார். இவரது வீட்டிலும் நேற்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
ராமேஸ்வர முருகன் பள்ளிக்கல்வித் துறை இயக்குநராகப் பொறுப்பு வகித்தபோது, வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.