Published : 12 Oct 2023 05:13 AM
Last Updated : 12 Oct 2023 05:13 AM
சென்னை: எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு அவரது இருக்கை முன்பு தரையில் அமர்ந்து கோஷமிட்ட அதிமுக உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணை தலைவர் குறித்தும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் 10 முறை கடிதம் அளித்துள்ளோம். உயர் நீதிமன்ற தீர்ப்பின் நகல், உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் நினைவூட்டல் கடிதம் அளித்துள்ளோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. நீக்கப்பட்டவர்களை கணக்கிட்டு அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை குறைத்தும் அறிவிக்கவில்லை.
பேரவைத் தலைவர் அப்பாவு: ஒரு போதும் நான் தேர்தல் ஆணையம், நீதிமன்ற முடிவின்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறவில்லை. இப்போதும் எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் நியமனத்தை நாங்கள் மறுக்கவில்லை. இருக்கை குறித்து முன்னாள் பேரவைத் தலைவர் பி.தனபால், கடந்த 2013 பிப்.6-ம் தேதி பேசும்போது, சட்டப்பேரவைக்குள் இருக்கை குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லை. அது என்னுடைய உரிமை எனக் கூறியுள்ளார். துணைத் தலைவர் குறித்து நீங்கள் பரிந்துரைப்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதே நேரம், எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே விதிப்படி அங்கீகரிக்கப்பட்டது. இருக்கை விவகாரத்தில் தரக்கூடாது என்பதில்லை. விதிப்படி செய்கிறேன். ஒரு கட்சியில் வெற்றி பெற்று அக்கட்சிக்கு எதிராக வாக்களித்தால், பதவி பறிக்கப்படும். ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரையும் முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் உங்கள் வசதிக்காக நீக்காமல் இருந்தார். இதுபோன்ற நிகழ்வு இருந்தால் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். விதிப்படி சட்டப்படி, உரிமையை பறிக்காமல் அவை நடைபெறுகிறது.
இதையடுத்து பேசிய பழனிச்சாமி காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது போல தங்களுக்கும் துணைத்தலைவர் இருக்கை ஒதுக்க வேண்டும் என்றும் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் 3 பேர் நீக்கம் செல்லும் என்று தெரிவித்துள்ளதாகவும் எனவே அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை குறைத்து அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இன்னும் இரண்டேகால் ஆண்டுகள் தான் உள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மரபை மாற்ற வேண்டாம் என்றும் பழனிசாமி வலியுறுத்தினார்.
அப்போது ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர் பால் மனோஜ் பாண்டியனும் பேச முற்பட்டதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதையடுத்து, எதிர்க்கட்சியினர் கலகம், விவகாரம் செய்ய வந்துள்ளதாகவும் கட்சி விவகாரங்களை வெளியில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அவை விதிப்படி நடப்பதாகவும் அப்பாவு தெரிவித்தார். ஓபிஎஸ்ஸை உங்கள் பக்கத்தில் அமர வைத்தது நான் அல்ல; நீங்கள்தான் என்றும் கூறினார்.
தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு, அவரது இருக்கை முன் அமர்ந்து கோஷம் எழுப்பினர். அப்போது இருக்கைக்கு செல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்பதாக பேரவைத் தலைவர் எச்சரித்தார். தொடர்ந்து அதிமுகவினர் கோஷம் எழுப்பிய நிலையில், அவைக்கு குந்தகம் விளைவிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, அவைக்காவலர்களால் அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். பின்னர் ஓபிஎஸ் எழுந்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், பழனிசாமி பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். ஆனால், பேரவைத் தலைவர் அவற்றை நீக்கவில்லை.
இதையடுத்து, வெளியேற்றத்துக்கான காரணம் குறித்து பேரவைத்தலைவர் அப்பாவு விளக்கினார். “அதிமுக நான்கு அணியாக செயல்படுகிறது. இவர்கள் எப்போது வேண்டுமானாலும் சேரலாம். ஆளுநர் இருவரையும் அழைத்து பேசினாலும் சேர வாய்ப்புள்ளது. ஆனால், சட்டப்பேரவையில் உட்கட்சி விவகாரம் குறித்து பேசக்கூடாது” என்றார்.
இந்நிலையில் பேரவையின் வெளியே செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறும்போது, எங்கள் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. பேரவைத் தலைவருக்கான தனிப்பட்ட அதிகாரத்தில் குறுக்கிடவில்லை. எங்கள் கேள்விகளுக்கு பேரவைத் தலைவரே குறுக்கிட்டு பதிலளிக்கிறார். நீக்கப்பட்ட 3 பேரையும் எக்கட்சியையும் சாராத உறுப்பினர்கள் என்று அறிவிக்க வேண்டும். அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம். எந்த மரபையும் கடைபிடிக்காமல் உள்ளார். சாக்கு போக்கு சொல்லி நிராகரிக்கிறார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT