Published : 10 Oct 2023 06:03 AM
Last Updated : 10 Oct 2023 06:03 AM

2022-23-ம் நிதியாண்டில் ரூ.1,253 கோடி வருவாய் ஈட்டிய தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை: அஞ்சல்துறை தலைவர் தகவல்

தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு, அண்ணாசாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள அஞ்சல் சேகரிப்பு மையம், வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. படம்: ம.பிரபு

சென்னை: கடந்த 2022-23-ம் நிதியாண்டில் தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை ரூ.1,253.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என அதன் முதன்மை அஞ்சல்துறை தலைவர் ஜெ.சாருகேசி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்திய அஞ்சல்துறை, ஐக்கியஅஞ்சல் ஒன்றியம் 1874-ல் நிறுவப்பட்டதன் நினைவாக அக்.9 (நேற்று)முதல் வரும் 15-ம் தேதி வரை அஞ்சல் வாரமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. ‘நம்பிக்கையோடு ஒன்றிணைவோம்’ என்பதே இந்த ஆண்டுக்கான உலக அஞ்சல் தின கருப்பொருளாகும். அஞ்சல்வாரத்தை முன்னிட்டு வரும்13-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு நிகழ்ச்சி நடைபெறும்.

இதன்படி, அக்.10-ம் தேதி நிதிஅதிகாரமளிப்பு தினத்தை முன்னிட்டு அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வும், 11-ம் தேதி அஞ்சல்தலை சேகரிப்பு தினத்தன்று அஞ்சல்தலை சேகரிப்பு குறித்து பள்ளி மாணவர்கள் மத்தியிலும், 12-ம் தேதி அஞ்சல் மற்றும் பார்சல் தினத்தன்று வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி அவர்களுக்கு அஞ்சல்துறையின் புதிய சேவைகள் குறித்தும், 13-ம் தேதி அந்தியோதயா தினத்தன்று மக்களுக்கு அஞ்சல்துறை குறைந்த செலவில் வழங்கப்படும் சேவைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை பார்சல் சேவை, அஞ்சல் சேவைஉள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம்,கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 1,253.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.8 சதவீதம் அதிகம்.

அஞ்சலக சேமிப்பு கணக்கு மூலம் கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.659.97 கோடியும் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு மூலம் ரூ.1,181.37 கோடி பிரீமியம் வருவாயும், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு மூலம் ரூ.721.24 கோடி பிரீமியமும், தங்க பத்திரம் விற்பனை மூலம் ரூ.4.66 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2022-23 ம் நிதியாண்டில் சேமிப்பு கணக்கு மூலம், ரூ.689.21 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நிர்ணயித்ததைவிட ரூ.695.97 கோடி, அதாவது, 101 சதவீதம் வருவாய் ஈட்டப்பட்டது. அதே போல், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ், 32.57 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டதன் மூலம், அகில இந்திய அளவில் தமிழ்நாடு வட்டம் 2-வது இடத்தைப் பிடித்தது.

அதேபோல், மகளிர்மதிப்பு சேமிப்பு பத்திரம் திட்டத்தின்கீழ் 2.89 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டதன் மூலம் தமிழ்நாடு வட்டம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இவ்வாறு சாருகேசி கூறினார். இச்சந்திப்பின்போது, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜி.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x