

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கங்காகுளத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் விவசாயி தாக்கப்பட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், எஸ்.ஐ செல்லபாண்டி ஆகியோர் ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், விஏஓ ஶ்ரீதேவி, கிராம உதவியாளர் முத்துலட்சுமி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பிள்ளையார்குளம் ஊராட்சிக்குட்பட்ட கங்காகுளம் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 2-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் கேள்வி கேட்ட விவசாயி அம்மையப்பன் என்பவரை எம்எல்ஏ மான்ராஜ், பிடிஓ மீனாட்சி முன்னிலையில் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் காலால் எட்டி உதைத்தார். அப்போது அவரது ஆதரவாளர் ராசு என்பவர் அம்மையப்பனை தாக்கினார். இதுகுறித்த புகாரில் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தனிப்படை போலீஸார் அவரை தேடி வந்தனர். கடந்த 5-ம் இரவு ராசுவை போலீஸார் கைது செய்தனர். ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் மனு செய்து ஜாமீன் பெற்றார்.
இந்த விவகாரத்தில் சரியாக செயல்படாத ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சங்கர்கண்ணன், வன்னியம்பட்டி எஸ்ஐ செல்லப்பாண்டி ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், இந்தச் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத காரணத்தால் பிள்ளையார்குளம் விஏஓ ஶ்ரீதேவி, கிராம உதவியாளர் முத்துலட்சுமி ஆகியோர் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என விளக்கம் கேட்டு வட்டாட்சியர் செந்தில்குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
விவசாயி அம்மையப்பன் வெள்ளி இரவு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயி தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.