“காவிரி ஆற்றில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை” - உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை

பாலைவனம் போல வறண்டு காணப்படும் காவிரி ஆறு. இடம் - தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை | கோப்புப் படம்
பாலைவனம் போல வறண்டு காணப்படும் காவிரி ஆறு. இடம் - தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை | கோப்புப் படம்
Updated on
1 min read

மதுரை:காவிரி ஆற்றில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை. பொன்னியின் செல்வன் கதையில் வருவது போல் காவிரி ஆறு தற்போதும் உள்ளதாக நினைக்கின்றனர். அது உண்மையல்ல” என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த நாகராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: அரவக்குறிச்சி பகவதியம்மன் கோயில் மார்கழி திருவிழாவின் போது அரவக்குறிச்சி ஆவுடையார் பாலம் காவிரி ஆற்றில் புனிதநீர் எடுத்து வர சென்ற எனது மகன் பிரபாகரன் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.

காவிரி ஆற்றில் மணல் கொள்ளை மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது. உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. எனவே விரைவில் இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: காவிரி ஆறு மோசமான நிலையில் உள்ளது. பொன்னியின் செல்வன் கதையில் வரும் காவிரி ஆறு போல தற்போது காவிரி ஆறு உள்ளதாக நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் அது உண்மையல்ல. காவிரி ஆற்றில் தண்ணீரும் இல்லை. மணலும் இல்லை. கடந்த வருடம் மட்டுமே ஆற்றில் தண்ணீர் ஓடியது. இந்த வழக்கில் புனித நீராடும் போது நீரில் முழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீட்டு தொகையை 4 வாரத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in