திமுக எம்.பி. வீட்டில் ஐடி ரெய்டு முதல் அண்ணாமலையின் தேர்தல் பார்வை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.5, 2023

திமுக எம்.பி. வீட்டில் ஐடி ரெய்டு முதல் அண்ணாமலையின் தேர்தல் பார்வை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.5, 2023
Updated on
3 min read

குறுவை பாதிப்பு: ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு: காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் பெறப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீட்டுத் தொகையாக வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் போராட்டத்தை தொடர்ந்த ஆசிரியர்கள் கைது: சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தை 8-வது நாளாக தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் வியாழக்கிழமை அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் பல்வேறு சமுதாய கூடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்த நிலையில், கைது செய்யப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ள சமுதாய கூடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இல்லை என்று அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, "ஆசிரியர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட நியாயமான கோரிக்கையைக்கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள ஆசிரியர்களை தமிழக அரசு மீண்டும் அழைத்து பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமான சிலவற்றையாவது ஏற்று அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஜெகத்ரட்சகன் எம்.பி தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை:சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் சோதனை மேற்கொண்டனர். அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, தி.நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலிலும் சோதனை நடைபெற்றது.

கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததன் பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையின் சோதனை நடந்துள்ளது.

இதனிடையே "ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் எல்லைகளற்று நீளுகிறது. ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங்கின் கைதும், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் இல்லத்தில் நடந்த சோதனைகளும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய விசாரணை அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு எப்படி அரசியல் நோக்கத்துடன் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதற்கான தெள்ளத் தெளிவான எடுத்துக்காட்டுகளாகும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக கோயில்கள் குறித்த பிரதமரின் பேச்சு: கே.எஸ்.அழகிரி விமர்சனம்: தென் மாநிலங்களில் இந்து கோயில்களை மாநில அரசாங்கம் வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, கோயில் சொத்துகளையும், அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தையும் முறைகேடாக பயன்படுத்தி வருகிறது, இது ஒரு அநீதி என்று பிரதமர் மோடி கூறியதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

"இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் மதமாச்சர்யங்களை உருவாக்கி, வகுப்புவாத கலவரங்களுக்கு தூபம் போட்டு பாஜகவை வளர்த்துவிடலாம் என்ற பிரதமர் மோடியின் கனவு என்றைக்கும், எந்தக் காலத்திலும் நிறைவேறாது" என்று அவர் கூறியுள்ளார்.

“2024 தேர்தலில் திமுக - பாஜக இடையேதான் போட்டி”: "திமுகவா, பாஜகவா என்பதுதான் சவால். திமுக தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. போட்டி எங்கள் இருவருக்கும்தான். 2024 தேர்தலில் அதை பார்த்துவிடலாம்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதனிடையே, "பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. பாஜகவை பலப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. பாஜக என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். எப்படியெல்லாம் கூட்டணியை முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது" என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி குறித்த கேள்விக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம்: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை ஏன் குற்றவாளியாக்கவில்லை என்று அமலாக்கத் துறையிடம் புதன்கிழமை கேட்ட கேள்விக்கு, ‘எந்த அரசியல் கட்சியையும் சிக்கவைக்க அப்படி கேட்கவில்லை’ என்று உச்ச நீதிமன்றம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஊடக சங்கங்கள் கடிதம்: நியூஸ்கிளிக் நிறுவனத்தில் டெல்லி போலீஸார் சோதனை நடத்தி அதன் உரிமையாளர் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை தலைவரை கைது செய்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஊடக சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளன. அதில், நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான பத்திரிகையாளர்கள் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்துடன் அழுத்தத்துடன் பணியாற்றுகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்விவகாரத்தில் தலைமை நீதிபதியின் தலையீட்டை அவை கோரியுள்ளன.

இதனிடையே, காஷ்மீரும், அருணாச்சலப் பிரதேசமும் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்பதாக செய்தி பரப்ப நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா முயன்றதாக டெல்லி காவல் துறை குற்றம்சாட்டியுள்ளது.

மணிப்பூரில் 2 வீடுகளுக்கு தீ வைப்பு: கடந்த மே மாதம் கலவரத்தால் பற்றி எரிந்த மணிப்பூர் மாநிலத்தில் மெள்ள இயல்பு திரும்பு சூழலில், புதன்கிழமை இரவு இரண்டு வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவம் நடைபெற்றதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நார்வே எழுத்தாளருக்கு இலக்கிய நோபல் பரிசு: 2023-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, நார்வே எழுத்தாளரான ஜான் ஃபோஸ்ஸேக்கு (Jon Fosse) அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ஸேயின் "சொல்ல முடியாதவற்றுக்காக குரல் கொடுக்கும் அவரது புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைகளுக்காக" இப்பரிசு வழங்கப்படுவதாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.

சிக்கிம் வெள்ளம்: 14 பேர் உயிரிழப்பு; 102 பேர் மாயம்: சிக்கிம் மாநிலத்தின் தீஸ்தா நதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 14 பேர் உயிரிழந்ததாகவும், 22 ராணுவ வீரர்கள் உள்பட 102 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in