Published : 05 Oct 2023 03:09 PM
Last Updated : 05 Oct 2023 03:09 PM

“இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க நியூஸ்கிளிக் நிறுவனர் சதி” - டெல்லி காவல் துறை

நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்துக்கு எதிரான காவல் துறை நடவடிக்கையை கண்டித்து டெல்லியில் உள்ள பிரஸ் கிளப் ஆப் இந்தியா வளாகத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் பங்கேற்ற பத்திரிகையாளர்கள்.

புதுடெல்லி: காஷ்மீரும், அருணாச்சலப் பிரதேசமும் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்பதாக செய்தி பரப்ப நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா முயன்றதாக டெல்லி காவல் துறை குற்றம்சாட்டியுள்ளது.

சீனாவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை பரப்புவதற்காக பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் நியூஸ் கிளிக்கில் மனிதவளத் துறைத் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது: "ஷாங்காயை மையமாகக் கொண்ட நிறுவனத்தை நடத்தி வரும் நெவில்லி ராய் சிங்கம் என்ற தொழிலதிபரும், அவரது நிறுவன பணியாளர்களும், பிரபுர் புர்கயஸ்தாவும் இமெயில்கள் மூலம் தொடர்பில் உள்ளனர்.

காஷ்மீரும் அருணாச்சலப் பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் அல்ல; அவை சர்ச்சைக்குரிய பகுதிகள் என்பதாக செய்தியை உருவாக்கி பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் செயல்பட்டிருப்பது அந்த மெயில்கள் மூலம் தெரியவந்துள்ளது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இத்தகைய செய்தியை பரப்புவது குறித்து அவர்கள் சதி திட்டம் தீட்டி இருக்கிறார்கள். இது இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான திட்டமிட்ட சதி செயல்.

நியூஸ் கிளிக்கின் பங்குதாரரான கௌதம் நவ்லகா, தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்புகளை தீவிரமாக ஆதரிப்பது, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஏஜென்டான குலாம் நபி ஃபாயுடன் சேர்ந்து தேச விரோத, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், புர்கயஸ்தாவும், அவரது கூட்டாளிகளும் வெளிநாட்டு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் இந்தியாவின் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை சீர்குலைக்கவும், சட்டவிரோத வெளிநாட்டு நிதி மூலம் விவசாயிகளின் போராட்டத்தை நீட்டிக்கச் செய்து அதனை் மூலம் பொது சொத்துகளை சேதப்படுத்த சதி செய்துள்ளனர். கோவிட் 19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளை இழிவுபடுத்துவதற்காகவும் இவர்கள் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் செயல்முறையை நாசப்படுத்த, ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான மக்கள் கூட்டணியுடன் சேர்ந்து புர்கயஸ்தா சதி செய்துள்ளார். சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதியைப் பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக வேண்டுமென்றே தவறான செய்திகளை பரப்புவதற்கு புர்கயஸ்தா தனது இணைய தளத்தைப் பயன்படுத்தி உள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள், வெளிநாட்டு நிதி என்ற போர்வையில், 115 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம் பெற்றுள்ளனர்." இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி இருவரையும் 15 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி டெல்லி காவல் துறை மனு தாக்கல் செய்த நிலையில், அவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நியூஸ்கிளிக் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை தலைவரை கைது செய்ததற்கு பல்வேறு ஊடக சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஊடக சங்கங்கள் எழுதியுள்ள கடிதத்தில், இவ்விவகாரத்தில் தலைமை நீதிபதி தலையி வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x