வேட்டைக்காரர்களால் சிறுத்தைக்கு ஆபத்தா?- சமூக ஆர்வலர்களுக்கு வனத்துறை விளக்கம்

வேட்டைக்காரர்களால் சிறுத்தைக்கு ஆபத்தா?- சமூக ஆர்வலர்களுக்கு வனத்துறை விளக்கம்
Updated on
1 min read

செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் வனப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியால் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்கவும், சிறுத்தைப்புலியின் பாதுகாப்புக்காகவும், அதை பிடிப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. சிறுத்தைப்புலி விரைவில் பிடிபடும் என்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் வனத்துறை கூறியுள்ளது.

செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான வல்லம், ஒழலூர், பழவேலி, வேதநாராயணபுரம், இருங்குன்ற பள்ளி ஆகிய கிராம பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக சிறுத்தைப்புலி சுற்றித் திரிவதாக செய்தி வெளியானது. இதை உறுதி செய்ய அதிகாரிகள் வைத்த தானியங்கி கேமராவில், அஞ்சூர் வனப்பகுதியில் 8 வயதுடைய ஆண் சிறுத்தைப்புலியின் நடமாட்டம் பதிவானது. இதையடுத்து, சிறுத்தைப்புலியை பிடிக்க அஞ்சூர் வனப்பகுதியில் வனத்துறையினர் 2 கூண்டுகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து, செங்கல்பட்டு வனத்துறை அதிகாரி கோபு கூறியதாவது: “வனப்பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தைப்புலி இதுவரை ஊருக்குள் வரவில்லை. அதனால், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற நிலையில், அதை ஏன் பிடிக்க வேண்டும் என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளதாக தெரிகிறது.

பொதுவாக சிறுத்தைப்புலிகள், தண்ணீர் மற்றும் பாதுகாப்புடன் கூடிய அடர்ந்த நிலை வனப்பகுதி உள்ளதை உறுதி செய்தபின்தான் அங்கு வாழும். இதுபோன்ற சூழ்நிலை செங்கல்பட்டு பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் காணப்படுகிறது. அதனால், சிறுத்தைப்புலி இங்கு சுற்றித்திரிகிறது. ஆனால், வனத்தை ஒட்டியுள்ள ஒரு சில இடங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்ததாக கூறப்படுகிறது.

அதனால், பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. அதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சிறுத்தைப்புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுத்தைப்புலியை பிடிக்காவிட்டால், மர்மநபர்கள் விஷம் கலந்த உணவை வனப்பகுதியில் வைத்து அதை கொல்வதற்கான வாய்ப்புள்ளதால், அதன் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. அதனால், சிறுத்தைப்புலியின் பாதுகாப்புக்காகவும் அதை பிடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அஞ்சூர் வனப்பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகம் உள்ளதால் அங்கு கூண்டு அமைத்துள்ளோம். புதிதாக உள்ள மாற்றத்தை சிறுத்தைப்புலி எளிதில் கண்டுபிடிக்கும் திறன்கொண்டது. அதனால், கூண்டினால் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தால் தனக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதி செய்தபின்தான் கூண்டின் அருகிலேயே சிறுத்தைப்புலி செல்லும். மேலும், கூண்டு அமைக்கப்பட்டுள்ள பகுதியில் மனித நடமாட்டம் இருப்பதை சிறுத்தைப்புலி உணர்ந்தால், கூண்டின் பக்கம் சிறுத்தைப்புலி வராது. எனவே, வாசனை திரவியங்கள் இல்லாத உடைகள் மற்றும் கையுறை போன்றவற்றை அணிந்துகொண்டு கூண்டு அமைக்கப்பட்டுள்ள வனப்பகுதிக்கு சென்று கண்காணித்து வருகிறோம். கூடிய விரைவில் சிறுத்தைப்புலி சிக்கும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in