

சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஓடும் மின்சார ரயில்களில் தலா 3 ஏசி பெட்டிகளை இணைப்பது தொடர்பாக தெற்கு ரயில்வேக்கு சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (கும்டா) பரிந்துரை செய்துள்ளது. இதை ஏற்று,சோதனை அடிப்படையில் முடிவு எடுக்க, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரிகள் கூறியதாவது: மின்சார ரயிலில் எல்லா தரப்பு மக்களும் பயணிக்கும் வகையில், வசதிகளை ஏற்படுத்துவது அவசியமாகிறது. குறிப்பாக, நெடுந்தொலைவுக்கு செல்லும் மக்கள்கார், இருசக்கர வாகனத்தைத் தவிர்த்து, மின்சார ரயில்களில் செல்ல, மின்சார ரயில்களில் ஏசிபெட்டிகளைச் சேர்க்க வேண்டும்.சென்னை கடற்கரை-செங்கல்பட்டுவழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களிலும்தலா 1 முதல் 3 ஏசி பெட்டிகள் சேர்க்க ரயில்வேக்கு ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தோம்.
மேலும், இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதன் அறிக்கை விரைவில் எங்களிடம் சமர்ப்பிப்பார்கள். அந்த ஆய்வு அறிக்கையுடன் தெற்கு ரயில்வேக்கு மீண்டும் பரிந்துரை கடிதம் அனுப்பப்படும். இந்த ஆய்வில் பயணிகள் தேவை, நிறுத்தங்கள் வசதி,எத்தனை பெட்டிகள் இணைக்கலாம், பயணிகளின் வருகை எப்படி இருக்கும், செலவுகள் மற்றும் வருவாய் உள்ளிட்டவை குறித்து இடம்பெறும்.
சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ஏற்கெனவே மும்பை புறநகர் மின்சார ரயிலுக்காக ஏசி பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது. அதுபோல, சென்னை புறநகர் மின்சார ரயில்களுக்கான ஏசிபெட்டிகளைத் தயாரித்து இணைக்கலாம் என்று கருத்துகளை வழங்கிஉள்ளோம்.
எங்கள் கருத்தை ரயில்வே நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டோம். அவர்களும் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். முதலில் சோதனை ஓட்டம் நடத்தி, அதன் அடிப்படையில் முடிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை 4 கூட்டம் நடத்திவிட்டோம். அடுத்த கூட்டம் அடுத்தவாரம் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ``சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என்ற கும்டா பரிந்துரை தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். இருப்பினும், எந்த முடிவும் எடுக்கவில்லை. பயணிகளின் தேவை அடிப்படையில் அடுத்த கட்ட முயற்சி எடுக்கப்படும்'' என்றனர்.