

சென்னை: போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு சாலையை சீரமைக்கும் பணிகள்துரிதமாக நடைபெற்று வருவதாகவும், இப்பணிகள் அனைத்தும் ஒரு வாரத்தில் முடிக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோடம்பாக்கம் முதல் போரூர்வரையிலான ஆற்காடு சாலையில்வடபழனி, சாலிகிராமம், சாலிகிராமம் கிடங்கு, வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், காரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம் ஆகியபகுதிகளில் சென்னை மெட்ரோரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் மூலம் சாலை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
சாலைகள் சேதம்: வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஆற்காடு சாலையில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும், அவ்வப்போது பெய்யும்மழையாலும், பிற துறைகளின்பணிகள் சாலை ஓரம் நடைபெறுவதாலும் சாலை சேதமடைந் துள்ளது. சாக்கடை நீரை சென்னைபெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத் தின் ஒப்பந்ததாரரான லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் இணைந்து ஆழ்துளையில் நிரம்பி வரும் தண்ணீரை சுத்தம் செய்து வருகின்றனர்.
மேலும், கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில், சாலை சீரமைப்புப் பணிகளையும், மெட்ரோ ரயில் தூண் பணிகள் முடிவடைந்த இடங்களில் தடுப்புகளை மாற்றி அமைக்கும் பணிகளையும் ஒப்பந்ததாரர் தொடங்கியுள்ளார். இந்தப் பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.