பழநி முருகன் கோயிலுக்கு மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல இன்று முதல் தடை
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு மொபைன் போன், கேமரா கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவு இன்று (அக்.1) காலை முதல் அமலுக்கு வந்தது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். கோயில் வளாகத்தில் மொபைல் போனில் படம் எடுத்து வந்தனர். இந்நிலையில் கோயிலுக்குள் மொபைன் போன், கேமரா கொண்டு செல்ல நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு அக்.1-ம் தேதி அமல்படுத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, இந்த உத்தரவு இன்று (அக்.1) காலை முதல் அமலுக்கு வந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக படிப்பாதை, ரோப் கார் மற்றும் வின்ச் ரயில் நிலையம் அருகே கைபேசி வைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு ஒரு மொபைல் போனுக்கு ரூ.5 கட்டணம் செலுத்தி பக்தர்கள் தங்கள் போனை ஒப்படைத்து விட்டு, தரிசனம் முடித்து வந்த பிறகு பெற்றுக் கொள்ளலாம். மொபைல் போன்களை பக்தர்களிடம் வாங்கி ரேக்குகளில் பாதுகாப்பாக வைத்து, மீண்டும் பத்திரமாக ஒப்படைப்பதற்காக, தனியார் நிறுவனம் மூலம் 30 ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.
மொபைல் போன் கொடுப்பதற்கும், பெறுவதற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். படிப்பாதை, வின்ச் ரயில் மூலம் மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் பக்தர்கள் மொபைல் போன், கேமரா கொண்டு செல்கின்றனரா என போலீஸார் சோதனை செய்தனர். அதனால் படிப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் மொபைல் போன், கேமராவுக்கு தடை உத்தரவு மற்றும் பக்தர்கள் கைபேசி பாதுகாப்பு மையங்களை அடையாளம் காணும் வகையில் ஆங்காங்கே தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது மொபைல் போன், கேமரா கொண்டு செல்வது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
