Published : 29 Sep 2023 04:16 AM
Last Updated : 29 Sep 2023 04:16 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக சேர்க்கப்பட்ட மாற்றுத் திறனாளியின் வயிற்றில் இருந்து குளிர்பான பாட்டில் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஒருவர் கடந்த வாரம் வயிற்றுவலி காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை, மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்தபோது,
வயிற்றில் கண்ணாடி குளிர்பான பாட்டில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து 21 செ.மீ. உயர கண்ணாடி குளிர்பான பாட்டிலை வயிற்றிலிருந்து அகற்றினர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மருத்துவக் குழுவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இது குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கூறியது: 45 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவரின் வயிற்றில் இருந்து 21 செ.மீ. உயர குளிர்பான பாட்டில் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. அவரது மலக்குடல் கிழிந்திருந்ததால் அதற்கும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வயிற்றுக்குள் கண்ணாடி பாட்டில் எப்படி சென்றிருக்க முடியும் என தெரியவில்லை. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT