Published : 26 Sep 2023 05:57 PM
Last Updated : 26 Sep 2023 05:57 PM

தனியார் வாகனங்களில் அரசு ஸ்டிக்கர்கள் பொருத்தினால் கடும் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: தனியார் வாகனங்களில் விதிகளை மீறி, அரசு சின்னங்கள், ஸ்டிக்கர்களை பயன்படுத்துவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் நடவடிக்கைகளை தொடர அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தனியார் வாகனங்களில், அரசு வாகனங்களுக்கு குறிப்பிடும் 'G' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும், 'இந்திய அரசு', 'தமிழ்நாடு அரசு' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், அரசு சின்னங்களையும், தமிழ்நாடு அரசு, இந்திய அரசு என வாகனங்களில் ஸ்டிக்கர்க்ளை ஒட்டிக் கொண்டு விதிமீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "தனியார் வாகனங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கர்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர.முனியப்பராஜ், இதே விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 2022-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விதிமீறல்களில் ஈடுபட்ட ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 17 தனியார் வாகனங்கள் கண்டறியப்பட்டு அவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 16 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும், இதுபோன்ற அரசு முத்திரைகள், பெயர்கள், சின்னங்களை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது தொடரும் என அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விதிகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீதான நடவடிக்கை என்பது ஒரு தொடர் நடைமுறை. எனவே, அந்த நடவடிக்கைகளை தொடர அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்துவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x