புதுக்கோட்டையில் பிளஸ் 2 மாணவர் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டோர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டோர்.
Updated on
2 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசுப் பள்ளி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக உறவினர்கள் இன்று (செப்.26) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை அருகே விஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையாவின் 17 வயது மகன், மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று காலாண்டுத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வந்த மாணவர், சிறிது நேர்த்தில் பள்ளியை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

பின்னர், இரவாகியும் மாணவர் வீட்டுக்குச் செல்லவில்லை. அவரது நண்பர்களிடம் விசாரித்தபோதும் விவரம் கிடைக்கவில்லை. இதையடுத்து, குடும்பத்தினர், உறவினர்கள் தேடியதில் பள்ளியின் அருகே மரத்தில் தூக்கில் சடலமாகத் தொங்கியது தெரியவந்தது. பின்னர், கணேஷ் நகர் காவல் நிலையத்தினர் மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவரை தலைமுடியை வெட்டிக்கொண்டு வருமாறு ஆசிரியர் கூறி, அவரிடம் கடுமை காட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட விரக்தியில் மாணவர் இவ்வாறு செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், மாணவர் பள்ளியில் இருந்து வெளியேறியே தகவலை பெற்றோருக்கு ஆசிரியர்கள் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஆகையால், இச்சம்பவத்தை சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மருத்துவக் கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை வட்டாட்சியர், கணேஷ் நகர் காவல் நிலையத்தினர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தினால் புதுக்கோட்டை, தஞ்சாவூர் இடையே சுமார் 1 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட மனநல மருத்துவர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம் கூறியபோது, “எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல. மன அழுத்தம் எல்லோருக்கும் வருவது இயல்பு. மன அழுத்ததம் ஏற்பட்டதற்கான காரணங்களை சக நண்பர்களிடம் மனம் விட்டு பேசினாலே சரியாகிவிடும். மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ 104 எனும் உதவி எண்ணில் தெரிவிக்கலாம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in