Last Updated : 26 Sep, 2023 09:19 AM

 

Published : 26 Sep 2023 09:19 AM
Last Updated : 26 Sep 2023 09:19 AM

தமிழகத்தில் டெங்கு பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப் படம்

மதுரை: கடந்த காலங்களைவிட தமிழகத்தில் தற்போது டெங்கு பரவல் கட்டுப்பாடில் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இறப்பதற்கு முன்னரே உடல் உறுப்பு தானம் செய்து உயிரிழந்தவருக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி தேனியைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் இறப்பதற்கு முன்னரே உடல் உறுப்பு தானத்துக்குப் பதிவு செய்திருந்தார். அவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை வந்தடைந்தார்.

தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இறப்பதற்கு முன்னரே உடல் உறுப்பு கொடை கொடுப்பவர்களுக்கு அரசு சார்பாக இறுதி மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அவ்வாறாக சின்னமனூரில் அரசு ஊழியர் ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்திருந்தார். நேற்று உயிரிழந்த அவரது உடலுக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்த இருக்கிறோம்." என்றார்.

மதுரையில் டெங்கு பரவல் அதிகமாக இருப்பது குறித்த கேள்விக்கு: "மதுரையில் இதுவரை 17 பேர் டெங்கு பாதிப்புக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒவ்வொரு பருவமழைக்கும் முன்பும் டெங்கு பாதிப்பு ஏற்படுகின்றது. டெங்கு பரவல் தொடர்பாக அண்மையில் அனைத்துத் துறை செயலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பிலும் கூட்டம் நடத்தப்பட்டு தடுப்புப் பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்குவால் கடந்த 2012-ல் 13,000 பேர் பாதிக்கப்பட்டு, 26 உயிரிழப்புகள் ஏற்பட்டன. 2017-ல் 23,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர், 65 உயிரிழப்புகள் ஏற்பட்டன. கடந்த காலங்களைவிட தமிழகத்தில் தற்போது டெங்கு பரவல் கட்டுப்பாடில் உள்ளது. நோய்த் தடுப்புக்காக 476 மருத்துவக் குழுக்கள் இயங்குகின்றன. 805 நடமாடும் பள்ளி மருத்துவக் குழு சார்பாக பள்ளி மாணவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வருகிற 1-ம் தேதி ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்" என்றார்.

உணவு பாதுகாப்பு துறை சார்பாக சிறிய உணவகங்களில் மட்டுமே சோதனை நடைபெறுவதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, "எந்தக் கடையில் பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பண்டங்கள் விற்கப்படுகிறதோ அங்கு சோதனை நடத்தப்படுகிறது.எங்கு தவறு நடைபெற்றாலும் அங்கு சோதனை நடத்தப்படும்" என்றார்.

எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு, "மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2028-ம் ஆண்டுக்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x