

சென்னை: இளம் கலைஞர்களுக்கான கலைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் அடுத்த மாதம் நடைபெறும் இசை விழாவில் வழங்கப்படும் என்று கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கலை பண்பாட்டுத் துறை சார்பில், கலைத் துறையில் சிறந்துவிளங்கும் 17 முதல் 35 வயதுக்குஉட்பட்ட இளம் கலைஞர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த, குரலிசை, கருவியிசை, ஓவியம், பரதநாட்டியம், கிராமியக் கலை ஆகிய பிரிவுகளில் மாவட்ட, மாநில அளவிலான கலைப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இப்போட்டிகள் 2022-23-ம் ஆண்டில் நடத்தப்பட்டு 570 வெற்றியாளர்களுக்கு ரூ.26.60 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்பட்டது. மேலும், 38 மாவட்டங்களிலும் 5 கலைப் பிரிவுகளில் முதலிடம் பெற்ற 190 இளம் கலைஞர்களுக்கு மாநில அளவிலான கலைப் போட்டி சென்னையில் நேற்று முன்தினம் செப்.24-ம் தேதி நடைபெற்றது.
இசை மற்றும் நடனப் போட்டிகள் அரசு இசைக் கல்லூரி வளாகத்திலும், ஓவியப் போட்டிகள் கவின்கலைக் கல்லூரி வளாகத்திலும் நடத்தப்பட்டன. குரலிசைப் போட்டியில் சென்னை ஸ்ரீஸ்வாரத்மிகா, கன்னியாகுமரி எஸ்.பவநேத்ரா, மதுரை எஸ்.மீனாட்சி ஆகியோரும், கருவியிசைப் பிரிவில் நாதஸ்வரக் கலைஞர் கரூர் பா.செல்வம், தவில் கலைஞர் மயிலாடுதுறை பா.முத்துக்குமார், வயலின் கலைஞர் சென்னை பி.வெண்ணிலா ஆகியோரும், பரதநாட்டியப் பிரிவில் கிருஷ்ணகிரி சி.ஜெயவீரபாண்டியன், ராணிபேட்டை ஏ.சுதர்சன், சென்னை எஸ்.சஹானா ஆகியோரும் முதல் 3 இடங்களைப் பெற்றனர்.
கிராமியக் கலைப் பிரிவில் திருப்பத்தூர் பி.குமரேசன், செங்கல்பட்டு அ.அர்ஜுன், ஈரோடு க.தேவி ஆகியோரும், ஓவியப் பிரிவில் திருவள்ளூர் மு.மணிகண்டன், ராணிப்பேட்டை ஆ.பணக்கோட்டி, சிவகங்கை ஏ.ஜானிராஜா ஆகியோர் முதல் 3 இடங்களை பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, அக்டோபர் மாதம் நடைபெற உள்ள இசை விழாவில், மாநிலக் கலைப் போட்டியில் வெற்றி பெற்ற 15 கலைஞர்களுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.20 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.