

சென்னை: கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா கூறும் மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிந்து அதன் பின் கருக்கலைப்பில் ஈடுபடுவது குற்றமாகும். ஆனால், தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், ‘ஸ்கேன்’ பரிசோதனை மையங்களில் சட்டவிரோத கருகலைப்பில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதை தடுக்க காவல்துறையுடன் இணைந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அண்மையில் தருமபுரியில், கருவில் இருப்பது, ஆணா, பெண்ணா என கண்டறிந்து சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும் போது, ‘‘மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் பரிசோதனை மையங்களில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என ஸ்கேன் செய்து கூறுவது தண்டனைக்குரிய குற்றம் என்ற பலகை அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற தவறுகள் கண்டறிந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ‘ஸ்கேன்’ பரிசோதனை மையங்கள் தொடர்ந்து கண்காணிக்கப் படும்’’ என்றார்.