

நீட் தேர்வின் பலன்: முதல்வர் ஸ்டாலின் கருத்து: "நீட் தேர்வின் பலன் என்ன என்றால் 'பூஜ்ஜியம்' தான் என்பதை ஒன்றிய பாஜக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. நீட் ஈக்வல் டூ ஜீரோ என்றாகி விட்டது. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இரக்கமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதனிடையே, "நடப்பாண்டுக்கான முதுநிலை நீட் தேர்வில் 30 பேர் ஒற்றை இலக்கத்திலும், 14 பேர் பூஜ்ஜியம் மதிப்பெண்களும், 13 எதிர்மறை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இப்போது கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இது மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தாது, கண்டிப்பாக குறைக்கும். இந்த முடிவு கண்டிக்கத்தக்கது" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
“நீட் தகுதியற்றது ஆகிவிட்டதாக சொல்வது அர்த்தமற்றது”: “நீட் தேர்வு தகுதியற்றதாகிவிட்டது என்று சொல்வது அர்த்தமற்றது. அது, புரிந்துகொள்ளாமல் சொல்வது” என்று புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நீட் தேர்வை ஒரு கையெழுத்தில் ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு, தற்போது ஒரு கோடி கையெழுத்து கேட்கும் நாடகத்தை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க வேண்டும்...” - அண்ணாமலை: "அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பிரச்சினை இருப்பது போல எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்கு தலைவராக இருக்கிறேன்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோடநாடு வழக்கு | இபிஎஸ் பற்றி பேச உதயநிதிக்கு இடைக்கால தடை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி கருத்துகளை தெரிவிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் படங்களை வெளியிட்ட என்ஐஏ: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் 10 பேரின் புகைப்படங்களை என்ஐஏ வெளியிட்டுள்ளது.
“நாடாளுமன்ற வரலாற்றில் பொன்னான தருணம்”: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியதற்காக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, “நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு பொன்னான தருணம்” என்று சிலாகித்தார். மேலும், முக்கியமான மசோதா நிறைவேற்றியதன் பெருமை, அவையின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சேரும் என்று தெரிவித்தார்.
இதனிடையே, மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிக்கை பாசங்குத்தனமானது என்று சிவ சேனா உத்தவ் தாக்கரே அணி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி குற்றம்சாட்டியுள்ளார். 2014-ம் ஆண்டு தேர்தலின் போதே இம்மசோதா குறித்து பாஜக வாக்குறுதி அளித்திருந்தும் இதனைக் கொண்டு வர 9 ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தொடையைத் தட்டிய பாலகிருஷ்ணா - எச்சரித்த சபாநாயகர்: சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் நடந்த அமளியின்போது, நடிகரும் எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா தொடையை தட்டி, மீசையை முறுக்கி ஆளும் கட்சியினருக்கு சவால் விடுத்துள்ளார். அவரின் இந்தச் செயலை சபாநாயகர் கண்டித்து எச்சரித்தார்.
கர்நாடகா - தமிழ்நாடு பிரச்சினையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு: கடந்த 18-ம் தேதி நடந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவினை எதிர்த்து கர்நாடகா உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை அவசர வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், தமிழகம் மற்றும் கர்நாடாகாவுக்கு இடையேயான காவிரி நீர் பிரச்சினையில் தலையிட உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளது.
கனடா நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்: மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டினருக்கு விசா வழங்குவது வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்தம் செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமருக்கு ஐஎம்எஃப் வலியுறுத்தல்: வசதி படைத்தவர்களுக்கு அதிக வரியை விதிக்குமாறு பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வாரூல் ஹக் காகரிடம், சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.