Published : 21 Sep 2023 03:35 PM
Last Updated : 21 Sep 2023 03:35 PM

“தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகவே நான் தலைவராக இருக்கிறேன்” - அண்ணாமலை

அண்ணாமலை | கோப்புப்படம்

கோவை: "அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பிரச்சினை இருப்பது போல எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்கு தலைவராக இருக்கிறேன்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக - பாஜக கூட்டணி இருக்கிறதா? இல்லையா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "என்னைப் பொறுத்தவரைக்கும் அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் பிரச்சினை இருக்கிறதா, இல்லை. தமிழக பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் பிரச்சினை இருக்கிறதா, இல்லை. எந்தப் பிரச்சினையும் இல்லை. இதில் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்கிறோம்.

அதேநேரத்தில் 4 நாட்களாக அதிமுக தலைவர்கள் நிறைய பேர் பேசியுள்ளனர். ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் பேசியுள்ளனர். அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பிரச்சினை இருப்பது போல எனக்குத் தெரியவில்லை. அதிமுகவில் இருக்கிற சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்சினை இருக்கிறதா, இருக்கலாம். அது எனக்கு தெரியாது. எனக்கு யாருடனும் பிரச்சினை இல்லை.

பாஜகவைப் பொறுத்தவரை, எங்கள் தலைவர் மோடி. மூன்றாவது முறையாக மோடியை முன்னிலைப்படுத்தி இந்தத் தேர்தலுக்கு செல்கிறோம். எங்களுடைய மையப்புள்ளி நரேந்திர மோடி. அவரை யார் எல்லாம் ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் இந்தக் கூட்டணியில் உள்ளனர். இந்த என்டிஏ கூட்டணியின் மையமே பிரதமர் நரேந்திர மோடிதான். அதை அதிமுகவும் ஏற்றுக்கொள்கிறது.

இன்றுகூட செல்லூர் ராஜூ, மத்தியில் பிரதமராக மோடியையும், மாநிலத்தில் முதல்வராக எடப்பாடி பழனிசாமியையும் பாஜக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை எப்படி நான் அறிவிப்பேன். எனக்குத் தெரியாது. இதை தேசிய தலைவர்கள்தான் சொல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரையில், அரசியல் இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

நான் யாரையும் தவறாகப் பேசவில்லை. என்னைப் பற்றி வரக்கூடிய விமர்சனங்களுக்குக் கூட நான் பதில் அளிக்கமாட்டேன். ஆனால், என் தன்மானத்தைக் கேள்விக்குறியாக்கும்போது நான் பேசுவேன். தன்மானத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்வதற்காக நான் இங்கு வரவில்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கும், தமிழக பாஜகவுக்கும் யாரிடமும் பிரச்சினை இல்லை. எனவே, அதிமுகவினர் கேட்கும் கேள்விகளுக்கு பாஜக தேசிய தலைவர்கள் பதில் கூறுவார்கள்" என்றார்.

மத்தியில் பாஜகவுடன் இணக்கமாக இருக்கும் அதிமுக மாநிலத்தில் ஏன் இருப்பதில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்தக் கூட்டணியைப் பொறுத்தவரை, ஒவ்வொரு கட்சியுமே, வேறு வேறு கருத்தியல் கோட்பாட்டைக் கொண்டவை. சிந்தாந்தத்தின் அடிப்படையில் அனைத்துக் கட்சிகளுமே வேறு வேறு. எனவே, இயற்கையாகவே இதுபோன்ற முட்டல்களும் மோதல்களும் வருவது சகஜம்தான். இதுவொரு பெரிய விஷயம் கிடையாது.

அதிமுக 72-ல் உருவான சரித்திரம் வேறு. பாரதிய ஜனசங்கம் 1950 காலக்கட்டத்தில் உருவானது வேறு. 1980-ல் பாஜகவாக மாறியது வேறு. அப்படியிருக்கும்போது அனைத்துப் பிரச்சினைகளையும் அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. இது ஒன்றும் புதிது கிடையாது.

அதுபோல, பாஜகவின் மாநிலத் தலைவராக எனக்கு ஓர் இலக்கு இருக்கிறது. இந்த கட்சி ஆட்சிக்கு வரவேண்டும், வளர வேண்டும். தமிழகத்துக்காக பாஜக அரசியல் செய்ய வேண்டும். தமிழகத்தின் மாநிலக் கட்சி போல இந்த தேசிய கட்சி செயல்பட வேண்டும். எனவே, இயற்கையாகவே கருத்து வேறுபாடுகள், வருவது இயல்புதான். அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை.

அண்ணா குறித்து எத்தனை இடங்களில் பேசியிருக்கிறேன். மது ஒழிப்பில் தமிழகத்துக்கு ஓர் உதாரணம் என்றால் அண்ணா. காரணம், அவர்தான் சொன்னார், மதுக்கடை ஆரம்பித்துதான் இந்த அரசை நடத்த வேண்டும் என்று சொன்னால், அது புழுத்துப்போன தொழுநோயாளியின் கையில் இருக்கக்கூடிய வெண்ணெய்க்கு சமம். எனவே அதை செய்யமாட்டேன் என்று கூறியவர். எனவே, எந்தக் காரணத்துக்காகவும் மதுக்கடைகளுக்கு கையெழுத்திட மாட்டேன் என்றார். இதுகுறித்து பல இடங்களில் பேசியிருக்கிறேன்.

குடும்ப அரசியலை எதிர்த்தவர் அண்ணா என்று நான் பேசியிருக்கிறேன். அறிஞர் அண்ணாவை எங்கேயும் தவறுதலாக விமர்சித்தது கிடையாது. சனாதனம் குறித்து பேசும்போது ஒரு சரித்திரக் கருத்தைக் கூறுகிறோம். சனாதனத்தை பாஜக ஆக்ரோஷமாக எதிர்க்கும். அதிமுகவும் அதையே செய்ய வேண்டியது இல்லை. அவர்கள் வேறு மாதிரியாக பேசுவார்கள். அதிமுக, பாஜகவை இணைக்கின்ற மையப்புள்ளி பிரதமர் நரேந்திர மோடிதான்.

என்னைப் பொறுத்தவரை, தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்கு தலைவராக இருக்கிறேன். அப்படி சொல்லித்தான் தலைவராகவும் வந்தேன். என்னைக் கொண்டுவரும்போது என்ன சிக்கல் இருக்கிறது என்று பாஜகவுக்கும் தெரியும். இந்தக் கட்சி ஆழமாகவும், ஆக்ரோஷமாகவும் வளர விரும்புகிறேன். அதேநேரத்தில் பாஜக எந்தக் கட்சிக்கும் போட்டியில்லை. இரண்டு திராவிட கட்சிகளும் சேர்ந்து 65 சதவீத வாக்குகளை வாங்கிவிடுகின்றனர். இன்னும் 35 சதவீத வாக்குகள் இருக்கிறது. மூன்றாவது ஒரு கட்சிக்கு தமிழகத்தில் ஒரு வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

அப்போது அண்ணா மன்னிப்புக் கோரவில்லை என்பது குறித்து, இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்தச் சம்பவம் குறித்து முத்துராமலிங்கத் தேவர் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் பலரும் பேசியுள்ளனர். முத்துராமலிங்கத் தேவர் குறித்து தெரிந்த நம்பத்தகுந்த ஆதாரங்கள் என்றால், தமிழகத்தில் இன்றைக்கு ஒரு நான்கைந்து பேர் உள்ளனர். அவர்கள் நான் பேசியதை ஆதரித்து பேசுகின்றனர்.

1998-ல் தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது, இதே நிகழ்வை ஒரு ரயில்வே விழாவில் பேசியிருப்பார். நீங்கள் கொஞ்சம் ஆய்வு செய்து பாருங்கள். அதை நான் மறுபடியும் சொன்னால், விமர்சனத்துக்கு உள்ளாகும். கருணாநிதி பேசிய வீடியோ உள்ளது. அதைப் பாருங்கள். அந்த வீடியோவில், 1956 நிகழ்வை கருணாநிதி குறிப்பிட்டிருப்பார். ஒரு ரயில்வே நிகழ்ச்சியில், முதல்வராக இருந்தபோது 1998-ல் பேசியிருப்பார்.

உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், கருணாநிதி பேசிய டிரான்ஸ்கிரிப்டை நான் வெளியிடுகிறேன். என்னைப் பொறுத்தவரை, நான் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க முடியாது. நான் கூறிய கருத்தில் இருந்து பின்னாடி போகமுடியாது. நான் பேசியதை தவறு என்றும் கூற முடியாது. சரித்திரத்தை உண்மையை பேசியிருக்கிறேன். இதுதான் உண்மை.

சரித்திரத்தில் என்ன இருக்கிறதோ, அதை சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. அண்ணாவை தரக்குறைவாக பேசவில்லை. அண்ணாவை எத்தனையோ இடத்தி்ல் உயர்த்தியும் பேசியிருக்கிறேன். மதுவிலக்கு, குடும்ப ஆட்சிக்கு எதிராக அண்ணா ஒரு கலங்கரை விளக்கம் என்று பேசியிருக்கிறேன். 1967 - 69 வரை மிக முக்கியமான தீர்மானங்களைக் கொண்டு வந்தது அவரது தலைமையிலான அரசு. இந்த நிலையில், வரலாற்றுக் கருத்தை நான் கூறியதை வரலாற்று ஆசிரியர்கள் பலரும் ஆதரித்துள்ளனர். எனவே, நான் பேசியதில் எங்கே பொய். நடந்ததை நடந்ததாக பேசியிருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x