அக்.1 முதல் பழநி கோயிலுக்கு மொபைல் போன் கொண்டு செல்ல தடை

அக்.1 முதல் பழநி கோயிலுக்கு மொபைல் போன் கொண்டு செல்ல தடை
Updated on
1 min read

திண்டுக்கல்: பழநி முருகன் கோயிலுக்கு அக்-1 முதல் மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை விதித்து கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி பாதுகாப்பு மையத்தில் வைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கோயில் வளாகத்திலும், கோயில் பின்னணியில் மொபைல் போனில் தங்களை படம்பிடித்து மகிழ்வர். இந்நிலையில் பழநி முருகன் கோயில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு படம் சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அதில், அக்-1 முதல் மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என அறநிலையத்துறை தெரிவித்தது.

இந்த உத்தரவை பழநி மட்டுமின்றி அனைத்து கோயில்களிலும் பின்பற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அக்-1 முதல் பழநி முருகன் கோயிலுக்குள் மொபைல் போன், கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்ததாவது: பழநி கோயிலுக்கு மொபைல் போன், கேமரா கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். தவறுதலாக கொண்டு வருபவர்களுக்காக, மலைக்கோயிலுக்கு செல்லும் படிப்பாதை, ரோப் கார் மற்றும் வின்ச் ரயில் நிலையத்தில் மொபைல் போன் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஒரு மொபைல் போனுக்கு ரூ.5 கட்டணம் செலுத்தி, தங்கள் மொபைல் போனை ஒப்படைத்து விட்டு, தரிசனம் முடிந்து வந்து பெற்று கொள்ளலாம் என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in