

காவிரி பிரச்சினை: முதல்வர் ஸ்டாலின் தகவல்: காவிரி நீர் அளிக்காததற்கு உண்மைக்கு புறம்பான பல காரணங்களை ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பது ஏற்கதக்கதல்ல. தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய நீரை கர்நாடகம் உடனடியாக விடுவித்திட ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, ஜல் சக்தி அமைச்சரிடம் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் தலைமையில் தமிழகத்தின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளிப்பார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் திட்ட பணியாளர்களுக்கு பாராட்டு: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பகிரப்பட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
‘விஸ்வகர்மா’ திட்டத்தை எதிர்த்து குரல் எழுப்புவோம்: திமுக: நாடாளுமன்றத்தில் இண்டியா கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து பாஜக அரசை எதிர்கொள்வோம்; விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் குரலெழுப்புவார்கள் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள், சனிக்கிழமை நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய பா.ஜ.க. அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட “விஸ்வகர்மா” திட்டம், குலத் தொழிலை ஊக்குவிக்கும் வகையிலான நடைமுறைகளை வகுத்து, அதிலும் குறிப்பாக 18 வயது நிறைந்துள்ளவர்களை கல்லூரிக்கு செல்ல விடாமல், பரம்பரை தொழிலையே செய்யத் தூண்டும் குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி. இத்திட்டத்தையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் கழக உறுப்பினர்கள் குரலெழுப்புவார்கள் என்று திமுக தெரிவித்துள்ளது.
திமுகவின் பகல் கனவு பலிக்காது: இபிஎஸ்: திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும், ரூ.1,000 கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ சோதனை: கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி உக்கடத்தில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலின் முன் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முபினின் உறவினர்கள், நண்பர்கள், அவருடன் தொடர்புடையவர்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, தமிழகத்தில் சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
“இது ஓர் ஒத்துழையாமை இயக்கம்” - காங்கிரஸ்: இண்டியா கூட்டணிக்கு எதிராக சில ஊடகவியலாளர்கள் செயல்படுவதாக அக்கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன. இதன் தொடர்ச்சியாக, 14 ஊடகவியலாளர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இண்டியா கூட்டணி சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பாஜக கடுமையாக விமர்சித்தது.
இந்நிலையில், “நாங்கள் அவர்களை தடை செய்யவில்லை. கருப்புப் பட்டியலிலும் வைக்கவில்லை. இது ஓர் ஒத்துழையாமை இயக்கம். சமூகத்தில் வெறுப்பைப் பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம்” என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மூவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் கேகர்நாக் அருகே காடோல் வனப் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் கடந்த 13-ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு பேர் வீரமரணம் அடைந்தனர் குறிப்பிடத்தக்கது.
ஒரே நாடு ஒரே தேர்தல்: செப்.23-ல் ஆலோசனைக் குழு கூட்டம்: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று அந்தக் குழுவின் தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பு: சசிதரூர்: “மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 6 முதல் 9 மாதங்கள் இருக்கின்றன. ஆனால், அரசு அதனை முன்கூட்டியே நடத்தலாம்” என்று திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
நிபா: கோழிக்கோட்டில் செப்.24 வரை கல்வி நிலையங்கள் மூடல்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் செப்டம்பர் 24 ம் தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் தொற்று எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.