ரூ.1,000 கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற திமுக-வின் பகல் கனவு பலிக்காது: மகளிர் உரிமைத் தொகையை விமர்சித்த இபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்.
எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்.
Updated on
2 min read

சென்னை: திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1,000/- ரூபாய் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும், ரூ.1,000 கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற திமுக-வின் பகல் கனவு பலிக்காது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏய்ச்சிப் பிழைக்கும் தொழிலையும், மக்களை ஏமாற்றியே அரசியல் நடத்தும் வித்தையையும், கைவந்த கலையாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆளும் திமுக-வும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசும், காலாகாலத்திற்கும் மக்கள், தங்களின் மகுடிக்கு மயங்கிக் கிடப்பார்கள் என்ற மமதையில் மிதந்து வருகிறது.

2021-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகவும், மகளிர் உரிமைத் தொகை 1,000/- ரூபாய் வழங்குவதன் மூலம் நூற்றுக்கு நூறு சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகவும், விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் வாய் பந்தல் போட்டுள்ளார்.

‘தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1,000/- ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம்’ என்று 2021 தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்து 28 மாதங்களாக தாய்மார்களை ஏங்க வைத்துவிட்டு இப்போது, பாதிக்கும் குறைவான மகளிருக்கு மட்டும் மாதம் 1,000/- ரூபாயை வழங்கியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

'சொல் ஒன்று - செயல் ஒன்று' என்று செயல்படுவதில் வித்தகரான இந்த விடியா அரசின் முதலமைச்சர், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1,000/- ரூபாய் வழங்கப்படும் என்று வாய் பந்தல் போட்டுவிட்டு, யாராலும் ஏற்க முடியாத ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதித்து, தமிழகத்தில் பாதி தாய்மார்களுக்கு மேல் பட்டை நாமம் போட்டிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது.

எனவே, திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1,000/- ரூபாய் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஆட்சிக்கு வந்து 28 மாதங்களாக மகளிர் உரிமைத் தொகையினை வழங்காமல் காலம் தாழ்த்திவிட்டு, தற்போது குறிப்பிட்ட மகளிருக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்குவதன் நோக்கம், விரைவில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது; அத்தேர்தலில் மகளிர் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது, நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் முதலமைச்சருடைய நப்பாசை எண்ணம்தான். விடியா அரசு பெண்கள் மீது அக்கறை கொண்டு இந்த உரிமைத் தொகையை வழங்கவில்லை என்பதும், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மகளிரின் வாக்குகளைப் பெறுவதற்காகத்தான் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என்பதும், மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

விடியா திமுக அரசு பதவியேற்ற 28 மாத காலத்தில், இரண்டுமுறை உயர்த்தப்பட்ட மின் கட்டணம், சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம்; பலமுறை உயர்த்தப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களின் விலை; அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையேற்றம்; குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ. 20 வரை உயர்ந்துள்ளது; காய்கறிகளின் விலை உயர்வு போன்றவைகளினால், அன்றாட வாழ்வில் ஒவ்வொரு குடும்பத்தினரின் மாதச் செலவுகளும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை கூடியுள்ளது. இந்நிலையில், பல சிரமங்களை அனுபவித்து வரும் தாய்மார்களில், பாதிக்கும் குறைவான மகளிருக்கு உரிமைத் தொகையை வழங்குவது திட்டமிட்ட ஏமாற்று வேலையாகும்.

"சிலரை சில நாள் ஏமாற்றலாம், பலரை பல நாள் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லா காலங்களிலும் ஏமாற்ற முடியாது’’ என்பதை இந்த பொம்மை முதலமைச்சருக்கு மக்கள் உணர்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in