பிடிவாரன்ட் எதிரொலி: உயர் நீதிமன்றத்தில் ஊரக வளர்ச்சி இயக்குநர் ஆஜர்

தமிழக ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா  | கோப்புப் படம்.
தமிழக ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா | கோப்புப் படம்.
Updated on
1 min read

மதுரை: பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் சித்தனவாசலை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் சித்தனவாசல் பூங்காவில் 1988-ல் இருந்து இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி நிரந்தரம் கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பல ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யப்படாததால் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரும், ஐஏஎஸ் அதிகாரியுமான பொன்னையா நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அவர் ஆஜராகவில்லை. இதனால் பொன்னையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரன்ட் பிறப்பித்தும், அவரை செப்.22-க்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் சென்னை மாநகர் காவல் ஆணையருக்கு நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு ஐஏஎஸ் அதிகாரி பொன்னையா இன்று நேரில் ஆஜரானார். அப்போது அவர் பல்வேறு நிகழ்வுகள் இருந்ததால் குறிப்பிட்ட நாளில் நேரில் ஆஜராக முடியவில்லை. நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படும். பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும். பிடிவாரன்டை திரும்ப பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதையேற்று, ''பிடிவாரன்ட் திரும்ப பெறப்படுகிறது. வழக்கு தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் பல ஆண்டுகளாகியும் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் பொன்னையாவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை அவர் ரோஜாவனம் முதியோர் இல்லத்துக்கு வழங்க வேண்டும். விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது'' என நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in