Published : 15 Sep 2023 04:13 AM
Last Updated : 15 Sep 2023 04:13 AM

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல்

கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் / விழுப்புரம்: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 18 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஒரு சில இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பெண்கள் உள்பட 6 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கடலூர் இணை இயக்குநர் (நலப்பணிகள்) சாரா செலின் பாலிடம் கேட்டபோது,“கடலூர் மாவட்டத்தில் கடலூர் மஞ்சக் குப்பம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், காட்டுமன்னார்கோவில் முட்டம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 பெண்கள் உள்பட 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் தற்போது நல்ல நிலையில் உள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க கடலூர் அரசு மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்தார். இந்நிலையில் விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள டெங்கு காய்ச்சல் தனி வார்டில் ஆட்சியர் பழனி நேற்று மாலை ஆய்வு நடத்தினார்.

அப்போது அவர் கூறுகை யில், "விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 17 பேர் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் 6 பேருக்குடெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல விழுப்புரம் அரசுத் தலைமை மருத்துவமனையிலும் 6 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் சீரான உடல் நிலையில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.

அப்போது சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் லட்சுமணன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் லதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x