

வேங்கைவயல் விவகாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்: வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி சத்தியநாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.
பொது இடங்களில் விநாயகர் சிலைகள் - ஐகோர்ட் அறிவுரை: “பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாமல் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது. சிலையைப் பாதுகாக்கும் பணியில் போலீஸார் இரவு பகலாக பணிபுரிய வேண்டியதுள்ளது. இதெல்லாம் தேவையா?” என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை குறிப்பிட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற மறுப்பு: சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை தானே விசாரிப்பதாக அறிவித்துள்ளார்.
ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.70 உயர்வு: ஆவின் நெய் விலை லிட்டருக்கு 70 ரூபாயும், அரை லிட்டருக்கு 50 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, 15 மி.லி. பாக்கெட் நெய் ரூ.14-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு ரூபாய் உயர்த்தி ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் நெய், வெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வை ஆவின் நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக மீனவர்கள் கைது கைது - மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை வியாழக்கிழமை அதிகாலை சிறை பிடித்தது.
இந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்: விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன், கடந்த 11-ம் தேதி தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில், ‘பாரதியும் விவேகானந்தரும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அப்போது திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக அவர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா.செல்வம் புகாரளித்தார். இதன் அடிப்படையில் ஆர்.பி.வி.எஸ்.மணியன் மீது பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் மாம்பலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இன்று காலை அவரை கைது செய்தனர்.
இதனையடுத்து, ஆர்.பி.வி.எஸ்.மணியன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு வியாழக்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர், மணியனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். அப்போது நீதிபதி, ஆர்.பி.வி.எஸ்.மணியனிடம் ‘உங்கள் மீதான புகாருக்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?’ என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆர்.பி.வி.எஸ்.மணியன், “நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மேலும் எனது முதுமை மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், எனக்கு சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் உள்ளன" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 27-ம் தேதி வரை ஆர்.வி.பி.எஸ்.மணியனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
“சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறது இண்டியா கூட்டணி” - மோடி: ‘கமாண்டியா’ கூட்டணியினர் சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறார்கள். இன்று அவர்கள் வெளிப்படையாக சனாதன தர்மத்தின் மீது குறிவைத்துள்ளார்கள். நாளை நம் மீதும் தாக்குதலைத் தொடங்குவார்கள். நாடு முழுவதும் உள்ள சனாதனிகள் மற்றும் நாட்டை மிகவும் நேசிக்கும் அனைவரும் அவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்றவர்களை நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்று பிரதமர் மோடி ஆவேசமாக குற்றம்சாட்டியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த பேரணிக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியை திமிர்பிடித்த என்று பொருள்படும் ‘கமாண்டியா’ என்று பிரதமர் மோடி கேலி செய்ததற்கு பதிலடியாக ஆளுங்கட்சிக் கூட்டணியை கவுதம் அதானி என்டிஏ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்திருக்கிறார்.
“மத்திய அரசு எதையோ மறைக்கிறது” - காங். விமர்சனம்: சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கடைசி நேரத்தில் கட்டவிழ்த்து விடுவதற்கு பெரிய வெடிகுண்டை அரசு வைத்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்தத் திரைக்கு பின்னால் வேறு ஏதோ ஒன்று இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சனாதனத்தின் சில கோட்பாடுகளையே எதிர்க்கிறோம்” - அமைச்சர் சேகர்பாபு: “சனாதனத்தை ஏற்றுக் கொண்டவர்களை எல்லாம் நாங்கள் எதிர்க்கவில்லை. சனாதனத்தில் உள்ள ஒரு சில கோட்பாடுகளைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். பெண் கல்வி மறுப்பு, கணவன் இறந்தவுடன் கைம்பெண்கள் உடன்கட்டை ஏறுதல், குலக்கல்வி திட்டம் உள்ளிட்ட கோட்பாடுகளை தான் நாங்கள் எதிர்க்கிறோம். முதல்வர் ஸ்டாலின் எங்காவது ஒரு இடத்தில் இந்து மதத்தை ஏதாவது ஒருவகையில், குற்றம் சுமத்தியோ, பழி சுமத்தியோ பேசியிருக்கிறார் என்று குறிப்பிட்டுக் காட்ட முடியுமா? இறை நம்பிக்கை என்பது அவரவருடைய விருப்பம். அதில் எப்போதுமே, திமுக தலையிட்டது கிடையாது. சமத்துவத்தின் ஒரு அங்கம்தான் திமுக” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் ராணுவத்தினர் 3 பேர் மரணம்: ஜம்மு காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தின் கேகர்நாக் அருகே காடோல் வனப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மன்பிரீத் சிங், ஆஷிஷ் தோன்சாக், ஜம்மு காஷ்மீர் டிஎஸ்பி ஹிமாயூன் முசாமில் பட் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர்.