‘எப்போ சார் திறப்பீங்க?’ - கிருஷ்ணகிரியில் பல லட்ச ரூபாய் செலவில் புனரமைத்தும் புழக்கத்துக்கு வராத சிறுவர் பூங்காக்கள்

கிருஷ்ணகிரி மோகன்ராவ் காலனியில் புனரமைக்கப்பட்டும் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ள நகராட்சி சிறுவர் பூங்கா.
கிருஷ்ணகிரி மோகன்ராவ் காலனியில் புனரமைக்கப்பட்டும் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ள நகராட்சி சிறுவர் பூங்கா.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பல லட்ச ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இரு சிறுவர் பூங்காக்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட மோகன்ராவ் காலனியில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுவர் பூங்கா திறக்கப்பட்டது.

இங்கு சிறுவர்கள் விளையாடத் தேவையான விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று குழாய்கள், குளம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன. இதேபோல, முதியவர்கள் இயற்கை சூழலில் அமர இருக்கைகள், நடைபாதையும் அமைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மாலை நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் பொழுதுபோக்குக்காகப் பூங்காவுக்கு அதிக அளவில் வந்து சென்றனர். கடந்த 2015-ம் ஆண்டு வரையில் மக்கள் பயன்பாட்டில் இருந்த பூங்கா, பின்னர் போதிய பராமரிப்பு இல்லாததால், விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து மூடப்பட்டது.

கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் உள்ள நகராட்சி சிறுவர் பூங்கா மூடப்பட்டுள்ளதால்,<br />மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் உள்ள நகராட்சி சிறுவர் பூங்கா மூடப்பட்டுள்ளதால்,
மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதேபோல, ஜக்கப்பன் நகர் 4-வது கிராஸில் சிறுவர் விளையாட்டு பூங்கா திறக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது. இந்த இரு பூங்காவையும் சீரமைத்துத் திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நகராட்சி நிர்வாகம் சார்பில் இரு பூங்காவும் பல லட்ச ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டன. ஆனால், இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல், மூடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: மோகன்ராவ் காலனி மற்றும் ஜக்கப்பன் நகர் 4-வது கிராஸில் நகராட்சி பூங்காக்கள் உள்ளன. இப்பூங்காக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புனரமைக்கப்பட்டது. இதனால், மக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா திறக்கப்படும் என எதிர்பார்த்தோம்.

ஆனால், திறக்காமல் மூடி வைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் பூங்கா பராமரிப்பு இன்றி பாழாகும் நிலையுள்ளது. பூங்காவில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளது. மழை நேரங்களில் பாம்பு உள்ளிட்டவை குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன.

நகரின் மையப்பகுதியில் உள்ள இரு சிறுவர் பூங்காக்களும் பயன்பாடில்லாமல் மூடப்பட்டுள்ளதால், பொழுதுபோக்க இடமின்றி சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இரு பூங்காவையும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in