

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆட்டோக்கள் மற்றும் கார்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், ரயில் ஏற வரும் பயணிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. சென்னையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றான சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஈரோடு, கோவை ஆகியவட மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென்மாநிலங்களுக்கும் டெல்லி, ராஜஸ்தான், குஜராத்,மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும் தினசரி விரைவு ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவைதவிர, சென்னை சென்ட்ரல் புறநகர் முனையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, நெல்லூர், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கும் புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. வேலை, கல்வி, சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் தினமும் இந்த ரயில் நிலையங்களுக்கு வருகின்றனர்.
இதனால், ரயில் நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் எப்போதும் பயணிகள் கூட்ட நெரிசல் காணப்படும். இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் பயணிகளை ஏற்றவும், இறக்கிச் செல்லவும் வரும் ஆட்டோக்கள், கார்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் செல்லும் வழியிலேயே நிறுத்துவதால் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து, பயணிகள் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் மற்றும் புறநகர் முனையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் ஆட்டோ மற்றும் கார்களில் வந்து செல்கின்றனர். இவ்வாறு பயணிகளை ஏற்ற, இறக்கிச் செல்ல வரும் ஆட்டோக்கள் மற்றும் கார்கள் வழியில் குறுக்கும், நெடுக்குமாக தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், பெட்டி, மூட்டை முடிச்சுகளுடன் ரயில் ஏற வரும் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
அதேபோல், புறநகர் முனையத்தில் காலை, மாலை வேலைகளில் வேலைக்கு அவசரமாக செல்பவர்களும், வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்புபவர்களும் ஓடி வந்து ரயில் ஏற முடியாத வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சிலர் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்தும் ரயிலை பிடிக்க முடியாமல் தவற விடும் நிலை ஏற்படுகிறது.
மேலும், சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும், பயணிகளும் ரயில் நிலையத்தைக் கடந்து செல்ல அவதிப்படுகின்றனர். அதேபோல், அல்லிக்குளம் பகுதியில் இருந்து வால்டாக்ஸ் சாலைக்குச் செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார்கள் அனைத்தும் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக சுற்றிச் செல்லாமல், சென்ட்ரல் ரயில் நிலையம் வளாகத்துக்கு உள்ளே புகுந்து செல்கின்றன. அதிலும் அதிவேகமாக செல்வதால் பயணிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இவ்வாறு அதிவேகத்தில் வரும் வாகனங்களை கட்டுப்படுத்தவோ அல்லது வழியில் நிறுத்தும் வாகனங்களை முறைப்படுத்தவோ ஒரு காவலரும் பணியில் ஈடுபடுவது கிடையாது.
ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீஸாரும் ரயில் நிலையத்துக்குள் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனரே தவிர ரயில் நிலையத்துக்கு வெளியில் உள்ள இந்த விவகாரங்களை கண்காணிப்பதில்லை. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த இடத்தில் அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வாகன இயக்கத்தை நெறிப்படுத்த வேண்டும். குறிப்பாக, பயணிகள் நடந்து செல்வதற்கு தனிப் பாதையும், வாகனங்கள் வந்து செல்வதற்கு தனிப் பாதையும் ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல், புறநகர் முனைத்தின் வாயில் பகுதியின் மிக அருகில் கார்கள் மற்றும் ஆட்டோக்கள் வந்து நிற்கின்றன. அவ்வாறு அருகில் வந்து நிற்பதற்குப் பதிலாக சற்று தொலைவில் நிறுத்த வேண்டும். அதேபோல், அல்லிக்குளம் பகுதியில் இருந்து வால்டாக்ஸ் சாலைக்குச் செல்லும் வழியில் வேகத் தடை அமைத்து வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த விவாகரம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், அதிவேகத்தில் வரும் வாகனங்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என் றனர்.