

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ‘எம்ஆர்ஐ ஸ்கேனுக்கு ஒரு நாளைக்கு 25 டோக்கன்தான்’ - ‘இருந்தாலும் ஜி.ஹெச். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு பா’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. இதில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க நூற்றுக்கணக்கான நோயாளிகள் அதிகாலை முதலே காத்திருந்தாலும் 25 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதாகவும் எனவே எம்ஆர்ஐ ஸ்கேன் எண்ணிக்கையை தேவைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவ சேவைகழகம் நிறுவனத்தால் பொருத்தப்பட்ட 2 எம்ஆர்ஐ பரிசோதனை கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. 24 மணி நேரமும் எம்ஆர்ஐபரிசோதனை பிரிவு இயங்கி வருகிறது. தினமும் 2 எம்ஆர்ஐபரிசோதனை கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாள்ஒன்றுக்கு 60 முதல் 70 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
எம்ஆர்ஐ பரிசோதனை செய்வதற்கு டோக்கன் வழங்கும் முறை இல்லை. எம்ஆர்ஐ பரிசோதனை என்பது ஒரு உயர்ரக பரிசோதனை என்பதால் எக்ஸ்ரே பரிசோதனை செய்வது போல சில மணித்துளிகளில் செய்ய இயலாது. ஒரு எம்ஆர்ஐ பரிசோதனை செய்யகுறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் ஆகும். சில நோயாளிகளுக்கு மயக்கவியல் நிபுணரின் துணையுடன் மயக்க மருந்து செலுத்தி எம்ஆர்ஐ பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். அப்போது பரிசோதனை முடிய ஒரு மணி நேரத்துக்கும் மேலாகும். எதிர்பாராத விதமாக சில நாட்களில் அதிக நோயாளிகளுக்கு உடனடியாக எம்ஆர்ஐ பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.