

சென்னை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினமும் 25 பேருக்கு மட்டுமே எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்படுவதால், அதற்கான டோக்கனை வாங்குவதற்காக அதிகாலையில் இருந்தே நோயாளிகள் காத்திருக்கின்றனர்.
ஆசியாவின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை திகழ்கிறது. உள்நோயாளிகளாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், புறநோயாளிகளாக தினமும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை கிடைத்தாலும், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, ரத்தக்கசிவு, கட்டி, சவ்வு, சதை, நரம்பு, மூளை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
ஆனால், மருத்துவமனையில் தினமும் 25 பேருக்கு மட்டும் ஸ்கேன் எடுக்கப்படுவதால், விரைவாக எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க முடியாமல் ஏராளமான நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அவர்களுக்கான சிகிச்சையும் தாமதம் ஏற்படுகிறது.
இதுதொடர்பாக நோயாளிகளிடம் கேட்ட போது, “இந்த மருத்துவமனையில் தினமும் 25 நோயாளிகளுக்கு தான் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்படுகிறது. அதற்கு முன்பதிவு எல்லாம் செய்ய வேண்டியதில்லை. காலையில் 25 பேருக்கு டோக்கன் கொடுக்கின்றனர். அதிகாலையிலேயே சென்று வரிசையில் நின்றால் தான் டோக்கன் கிடைக்கும். வரிசையில் 100 நபர்களாவது இருப்பார்கள். எவ்வளவு பேர் வரிசையில் இருந்தாலும் முதல் 25 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுப்பார்கள். டோக்கன் கிடைக்காதவர்கள் மறுநாள் கலையில் வந்து வரிசையில் நிற்க வேண்டும். இதனை சரிசெய்ய வேண்டும். ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் இந்த மருத்துவமனையில் கூடுதலாக 4, 5 எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்” என்றனர்.
மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்ட போது, “இந்த மருத்துவமனையில் இரண்டு எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளது. இன்று ஒன்று, நாளை மற்றொன்று என மாறி மாறி செயல்படுகிறது. தினமும் 25 பேருக்கு மட்டுமே ஸ்கேன் எடுக்கப்படுகிறது. ஒரு எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்தில் அதற்கு மேல் ஸ்கேன் எடுக்க முடியாது. சில நேரங்களில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களுக்கு அவசர சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும் உடனடியாக எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க முடிவதில்லை.
நோயாளிகளோ அல்லது அவர்களின் உறவினர்களோ மறுநாள் அதிகாலையில் சென்று வரிசையில் நின்று எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க டோக்கன் வாங்க வேண்டியுள்ளது. தினமும் 2 ஸ்கேன் இயந்திரமும் செயல்பட்டால் தினமும் 50 பேருக்கு ஸ்கேன் எடுக்க முடியும். அதுவும் போதுமானதாக இருக்காது. மருத்துவமனையில் கூடுதலாக எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்களை அமைக்க வேண்டும்” என்றனர்.
மருத்துவமனை டீன் தேரணிராஜனிடம் கேட்ட போது, “இந்த மருத்துவமனையில் மட்டும் தான் 24 மணி நேரமும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ளது. ஒருவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். இருந்தாலும் விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.