

சென்னை: சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (செப்.10) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிகவும் மோசம் என்றும், இதனை தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.
பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்தது. இதற்கான டிக்கெட்டுகள் மளமளவென விற்று தீர்ந்த நிலையில், மழை காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மானின் 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியை காணும் வகையில் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு டிக்கெட் வாங்கியவர்கள் செல்ல காலதாமதம் ஏற்பட்டது. அதோடு வாகனத்தை பார்க்கிங் செய்ய கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதனை ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பதிவுகளில் தெரிவித்தனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக சிலர் நிகழ்ச்சிக்கு வராமல் அப்படியே வீட்டுக்கு திரும்பி சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக ரூ.1,000-க்கு டிக்கெட் வாங்கியவர்கள் வேறொரு பிரிவுக்கான இருக்கையில் சென்றது, அதிகளவில் டிக்கெட் விற்பனை செய்தது போன்ற காரணத்தால் டிக்கெட் பெற்றவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும் ரசிகர்கள் தங்கள் பதிவுகளில் தெரிவித்துள்ளனர்.
இந்த தடைகள் அனைத்தையும் கடந்து உள்ளே சென்றவர்களுக்கு மோசமான அனுபவம் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. மோசமான ஆடியோ சிஸ்டம் காரணமாக பாடலை கேட்க முடியவில்லை என்றும் ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். விஐபி-க்களுக்கு மட்டும் தடபுடலான கவனிப்பு என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு மிகவும் மோசம், கூட்ட நெரிசல், பார்க்கிங் குழப்பத்துக்கு மத்தியில் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. ரசிகர்கள் சிலரோ இந்த நிகழ்ச்சிக்காக தாங்கள் செலுத்திய கட்டணம் திரும்ப தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது ஏமாற்று வேலை என்றும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.