

சென்னை: நாட்டின் கூட்டாட்சியை பலப்படுத்துவதற்கான பணிகளை நிதி ஆயோக் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 43-வது பட்டமளிப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள அதன் வளாகத்தில் விவேகானந்தர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக ஆளுநரும், பல்கலை.வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி முன்னிலை வகித்தார்.
விழாவில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை முடித்த 1 லட்சத்து 25,113 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அதில் பல்கலை. அளவில் சிறந்து விளங்கிய 65 பேர், ஆய்வு படிப்பை நிறைவுசெய்த 1,485 பேர் என 1,550 மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்களை ஆளுநர் ரவி வழங்கினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரிபேசியதாவது: சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்கேற்ப மாணவர்களுக்கும், சமுதாயத்துக்கும் பெரும் சேவைகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கான உத்திகளை வகுத்து அதை செயல்படுத்துவதற்கான வளங்களை ஏற்படுத்துவதற்கு மாநில அளவிலான கல்வி நிறுவனங்களை உருவாக்க முன்வரும் மாநிலங்களுக்கு நிதி ஆயோக் உதவுகிறது. இதற்காக அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.238 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் அறிக்கையின்படி 2015-16 மற்றும் 2019-21 ஆண்டுகளில் 13.55 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டுக்கு மேல் வந்துள்ளனர். 2047-ம் ஆண்டில் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ எனும் பிரதமரின் கனவு திட்டத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. அடுத்த 30 ஆண்டுகளில் உலகளவில் இந்தியாவில் உழைக்கும் வயதுடைய மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மேலும், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி என சுயசார்பு நாடாக இந்தியா வளர்ச்சி அடையும். சந்திரயான் வெற்றியால் ஏற்பட்ட உற்சாகத்தைப் பயன்படுத்தி, புதியதலைமுறையிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.
கூட்டாட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளில் நிதி ஆயோக்தொடர்ந்து ஈடுபடும். வளர்ச்சி அடைந்த நாடு என்ற இலக்கை அடைவதை உறுதி செய்வதில் மத்திய, மாநில அரசுகள்சம பங்குதாரர்களாக விளங்குவதையும் நிதி ஆயோக் உறுதிப்படுத்தும். நிதிஆயோக் மூலம் தேசிய தகவல் ஆய்வு மையத்தை உருவாக்கியுள்ளோம். இதை மாநில உதவித் திட்டம் மூலம் மாநில அரசுகள் பயன்படுத்திக் கொண்டு மாநில தகவல் ஆய்வு மையங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணா பல்கலை துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் பேசும்போது, “நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 3 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 5,200 மாணவர்களுக்கு ‘டிரோன்’ பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான 275 நிறுவனங்களில் 1,400இளநிலை பொறியியல் படித்த மாணவர்களும், 380 முதுநிலை பொறியியல் படித்த மாணவர்களும் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆண்டுக்குரூ.8.5 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வருமானம் கிடைக்கும் வகையில் வேலை கிடைத்துள்ளது” என்றார்.
இந்நிகழ்வில் உயர்கல்வித் துறை செயலர் கார்த்திக், அண்ணா பல்கலை பதிவாளர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.