Published : 06 Sep 2023 05:53 AM
Last Updated : 06 Sep 2023 05:53 AM
சென்னை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 152-வது பிறந்த தினத்தை ஒட்டி, கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் அவரது சிலைக்கு நேற்று மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ப.சுப்பராயன் சிலையையும் திறந்து வைத்தார்.
நாட்டின் விடுதலைக்காக தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர் வ.உ.சிதம்பரனார். அவரது சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயே அரசு, அவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து, கோவை சிறையில் அடைத்தது். வ.உ.சி.யின் பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின்152-வது பிறந்த தினம், தமிழக அரசின் செய்தித் துறை சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கிண்டி காந்தி மண்டபவளாகத்தில் உள்ள வ.உ.சி.யின்உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுமலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ஆளுநர் மரியாதை: ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, வ.உ.சி.யின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘வஉசியின் தியாகங்களுக்காக தேசம் அவரை என்றும் நினைத்து பெருமிதமும் நன்றியுணர்வையும் கொண்டிருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால், துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், தலைமைக் கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளி கிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்கள், ஊழியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT