

சென்னை: மேடவாக்கம் பகுதியில் மெட்ரோ பணிக்காக ஒரே நேரத்தில் ஒரு சாலையின் பல பகுதிகளை மூடி போக்குவரத்தை மாற்றி விட்டதால், மாம்பாக்கம் சாலை சந்திப்புகள் உட்பட சிறு தெருக்களிலும் நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட 5-வது வழித் தடத்தில் மேடவாக்கம் பகுதி இணைக்கப்பட்டு, மேடவாக்கம் –பெரும்பாக்கம் வழியாக மெட்ரோ ரயில் செல்வதற்கான பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தாம்பரம் – வேளச்சேரி சாலையில் மேடவாக்கம் கூட்டு சாலை முதல் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் செம்மொழிச் சாலை சந்திப்பு வழியாக மெட்ரோ ரயில் பணிக்காக தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக, அப்பகுதியில் பல வர்த்தக கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக செம்மொழிச் சாலையின் மத்தியில் தூண்கள் அமைக்கும் பணிக்காக சாலையின் பெரும் பகுதி தடுக்கப்பட்டு வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், சோழிங்க நல்லூரில் இருந்து மேடவாக்கம் நோக்கி வரும் அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள் அனைத்தும் சவுமியா நகர் வழியாக, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
இதனால், தினசரி காலை மற்றும் மாலை வேளையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து சிக்னல் அமைத்து போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் மெட்ரோ ரயில் பணியாளர்கள் நெரிசலை சரி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் நெரிசல் ஏற்படுவதால், மாம்பாக்கம் சாலையில் சித்தாலப்பாக்கம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் சவுமியா நகர் தெருக்களில் நுழைந்து, வீரபத்திரன் நகர் வழியாக மீண்டும் மாம்பாக்கம் சாலைக்கு வருகின்றன.
ஏற்கெனவே வீரபத்திரன் நகர் மற்றும் மாம்பாக்கம் சாலையில் தனியார் பள்ளிகள் இருப்பதால் மாணவர்களை இறக்கிவிட வரும் பெற்றோரின் வாகனங்கள் மற்றும்சித்தாலப்பாக்கம், பொன்மார் நோக்கி செல்லும் வாகனங்கள் என அனைத்தும் இந்த சந்திப்பு வழியாக செல்வதால் காலை, மாலை வேளைகளில் மிகுந்த நெரிசல் ஏற்பட்டு சிறு சிறு விபத்துகளும் நடக்கின்றன.
இது குறித்து வீரபத்திரன் நகரைச் சேர்ந்த டி.மோகன சுந்தரி கூறும்போது, ‘‘சாலையின் இருபகுதிகளிலும் பள்ளி இருப்பதால் வாகனங்கள் இப்பகுதியை கடந்து செல்வதும், பொதுமக்கள் சாலையை கடப்பதும் மிகுந்த சிரமமாக உள்ளது. குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர் பயத்துடனே செல்ல வேண்டியுள்ளது. சவுமியா நகர் பகுதியில் அமைத்துள்ளது போல இங்கும் சிக்னல் அமைக்க வேண்டும். போக்குவரத்து காவலர்களையாவது நியமித்து வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும்’’ என்றார்.
இதேபோல் மாம்பாக்கம் சாலையில் பாபு நகர் 3-வது பிரதான சாலையானது கிருஷ்ணவேணி நகர், காயத்ரி நகர், ஐஸ்வர்யா கார்டன் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் சாலை என்பதாலும், இப்பகுதியில் மின்வாரிய அலுவலகம், நியாயவிலைக் கடை, திருமண மண்டபம், தனியார் பள்ளிகள் அமைந்துள்ளதாலும் எப்போதும் வாகனப் புழக்கம் அதிகம் இருக்கும்.
இந்நிலையில், தற்போது மெட்ரோ ரயில் பணிகளுக்காக, மாம்பாக்கம் சாலையில்இருந்து இடதுபுறம் திரும்பி தாம்பரம் நோக்கி செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மேடவாக்கம் சந்திப்பில் உள்ள மேம்பாலம் கீழே சென்று வேளச்சேரி நோக்கி ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்து, மீண்டும் பாலத்தின்மேல் ஏறி தாம்பரம் நோக்கி செல்லும்படி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக மாம்பாக்கம் சாலைக்கு வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களும் பாலத்தின் மீதேறி, மீண்டும் தாம்பரம் நோக்கி செல்லும் சாலையில் இறங்கி 500 மீட்டர் தூரத்தில் சாலையின் வலதுபுறம் ‘யு’ திருப்பம் திரும்பி மீண்டும் வேளச்சேரி நோக்கி பயணித்து, வலதுபுறமாக மாம்பாக்கம் பயணிக்கும்படி போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
இந்த தலைசுற்றல் போக்குவரத்து மாற்றத்தால், மிரண்டு போன வாகன ஓட்டிகள் பாபு நகரின் 1 முதல் 4 வரையிலான பிரதான சாலைகளில் நுழைந்து நீலா நகர், விமலா நகர் வழியாக அங்குள்ள 20 அடி, 15 அடி குறுகிய சந்துகளில் பயணித்து தாம்பரம் செல்கின்றனர். அதேபோல், வேளச்சேரியில் இருந்து வருவோரும் மேடவாக்கம் பகுதியில் பாலத்தில் ஏறி இறங்கி மேற்கண்ட அதே பகுதிகள் வழியாக பயணித்து மாம்பாக்கம் சாலைக்கு வருகின்றனர்.
இதனால் வாகனப் புழக்கம் அதிகமாகி பள்ளிக் குழந்தைகள், வயதானவர்கள் பயணிப்பதற்கு சிரமம் தருவதாக மாறியுள்ளன. இது தவிர, மாம்பாக்கம் பிரதான சாலை, பாபு நகர் 3-வது தெரு சந்திப்பு பகுதியில் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மாம்பாக்கம் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பாபுநகர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி ஸ்ரீதர் கூறும்போது, ‘‘மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஒரே நேரத்தில் மாம்பாக்கம் சாலைக்கு வரும்வாகனங்களுக்கான வழியையும், மாம்பாக்கம் சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்வதற்கான சாலையையும் மூடிவிட்டதால் தான் இப்பகுதிகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஒரு புறம் பணிகளை முடித்துவிட்டு மற்றொரு புறம் பணிகளை தொடங்கியிருக்கலாம். இதனால் காலை 6 மணிக்கே பாபு நகர் தெருக்களில் யாரும் நடமாட முடியாத அளவுக்கு வாகனங்கள் வரத் தொடங்குகின்றன. இதுதவிர நெரிசல் நேரங்களில் கனரக வாகனங்களையும் அனுமதிப்பதால் கடும் போக்குவரத்து பிரச்சினை ஏற்படுத்துகிறது.
மேலும் திருமண மண்டபங்களும் உள்ளதால் முகூர்த்த நாட்களில் போக்குவரத்து பிரச்சினை உச்சத்தில் இருக்கும். மெட்ரோ ரயில்பணிகள் முடிவதற்கு ஓராண்டுக்கு மேலாகும்என்பதால் மெட்ரோ ரயில் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து மாற்றுபோக்குவரத்து திட்டத்தை உருவாக்க வேண்டும்’’ என்றார்.
இது குறித்து, மேடவாக்கம் பகுதியில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மெட்ரோ ரயில் அதிகாரிகள் பணிகள் நடைபெறும் இடத்தை குறிப்பிட்டு இந்த சாலையை மூட வேண்டும் என்று தெரிவித்தால் நாங்கள் அப்பகுதியில் ஆய்வு செய்து மாற்று ஏற்பாடுகளை செய்த பின் அறிவிப்பு வெளியிட்டு போக்குவரத்து மாற்றங்களை செய்துள்ளோம்.
அவர்களின் தேவைக்கேற்ப சாலைகளை மூடியுள்ளோம். மாம்பாக்கம் சாலையில் தேவையான இடங்களில் போக்குவரத்து காவலர்களை நியமித்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்’’ என்றனர்.