வாடகை வீட்டை 13 ஆண்டுகளாக காலி செய்ய மறுக்கும் தி.நகர் திமுக வட்டச் செயலாளரை 48 மணி நேரத்துக்குள் வெளியேற்ற நீதிபதி உத்தரவு

வாடகை வீட்டை 13 ஆண்டுகளாக காலி செய்ய மறுக்கும் தி.நகர் திமுக வட்டச் செயலாளரை 48 மணி நேரத்துக்குள் வெளியேற்ற நீதிபதி உத்தரவு
Updated on
1 min read

சென்னை: வாடகை வீட்டை 13 ஆண்டுகளாக காலி செய்ய மறுக்கும் சென்னை திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கத்தை 48 மணி நேரத்துக்குள் வீட்டை விட்டு வெளியேற்ற மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தி.நகர் அப்துல் அஜீஸ் தெருவில் கிரிஜா என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம், வீட்டை காலி செய்ய மறுத்து வந்தார்.

அதையடுத்து வீட்டை காலி செய்து கொடுக்கக்கோரி கிரிஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி நீதிமன்றம் ராமலிங்கத்தை காலி செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றும் ராமலிங்கம் காலி செய்யவில்லை.

இந்நிலையில் கிரிஜா மீண்டும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘ராமலிங்கம் திமுக வட்டச் செயலாளராக உள்ளதால் மனுதாரரும், அவருடைய கணவரும் தங்களது வயோதிக வயதில் இந்தவீட்டை திரும்பப் பெற 13 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

ராமலிங்கம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வாடகையும் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் ராமலிங்கத்துக்கு தி.நகர் தண்டபாணி தெருவில் சொந்த வீடு இருந்தும், தற்போதுள்ள வாடகை வீட்டை காலி செய்து கொடுக்க அவருக்கு மனமில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம், கடந்த ஆக.24-ம் தேதிக்குள் வீட்டை காலி செய்து, வாடகை பாக்கியையும் கொடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் கூறியபடி நடக்கவில்லை. தற்போது தனது வழக்கறிஞரை மாற்றிவிட்டார். அவர் தொடர்ந்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை உதாசீனப்படுத்தி வருகிறார்.

எனவே இந்த வழக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையரை எதிர்மனு தாரராக சேர்க்கிறேன். எனவே காவல் ஆணையர் 48 மணி நேரத்துக்குள் ராமலிங்கத்தை வெளியேற்றி, வரும் செப்.4-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in