

சென்னை: தமிழகம் முழுவதும் சேதமடைந்த கட்டிடங்களை கண்டறிந்து உடனே அப்புறப்படுத்தும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் பல இடங்களில் சேதமடைந்துள்ள பொதுக்கட்டிடங்கள் மற்றும் இதர கட்டுமானங்கள் குறித்து செய்திகள் வருகின்றன. எனவே, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஏதுவாக, சேதமடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் இதர கட்டுமானங்களை கண்டறிவது மிகவும்அவசியமாகிறது.
எனவே சேதமைடந்துள்ள பொதுக் கட்டிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், விடுதிகள், பேருந்து நிலையங்கள், அலுவலக கட்டிடங்கள் மற்றும்இதர முக்கிய உட்கட்டமைப்புகளான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், பாலங்கள் ஆகியவை குறித்து ஒருங்கிணைந்த மதிப்பீடு மற்றும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி, சேதமடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்களை கண்டறிந்து தொடர்புடைய துறைகள் மற்றும் முகமைகளுடன் ஒருங்கிணைந்து அனைத்து பொது மற்றும் அரசு கட்டிடங்கள் மற்றும் இதர உட்கட்டமைப்புகளை முழுமையாகக் கணக்கெடுப்பு செய்வது, அவற்றில் சேதமடைந்துள்ள, சிதிலமடையும் தருவாயில் உள்ளவற்றை உறுதிசெய்து மேல் நடவடிக்கைக்காக அரசின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும்.
மேலும், கட்டமைப்பு உறுதியாக உள்ளதா அல்லது சேதம், சிதிலமடைந்துள்ளதா என்பதை மதிப்பீடு செய்து, உறுதித்தன்மையை உறுதி செய்து, பழுது நீக்கத்தை முறையாக மேற்கொள்ள வேண்டும். சிதிலமடைந்த கட்டமைப்புகள் அச்சுறுத்தும் வகையில் உள்ள கட்டிடங்கள் கண்டறியப்பட்டால் பாதுகாப்பாக இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பராமரிப்பு, மறு கட்டமைப்புபணிகள் முடியும் வரை அக்கட்டிடங்களை பயன்படுத்துவதை தடை செய்து தெளிவாக அறிவிக்க வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்தஇடங்களான பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் பேருந்து நிலையங்கள் மற்றும் இதர முக்கிய கட்டமைப்புகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
இப்பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு, வரும் செப்.30ம் தேதிக்குள் முடித்து, பொதுமக்கள் நலன் பேண வேண்டும். மேலும்,மாவட்டம்தோறும் பழுது நீக்கம், சிதிலமடைந்து இடிக்கப்பட்ட கட்டிடங்கள் குறித்து விரிவான மற்றும் முழுமையான அறிக்கையை வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.