மியூசிக் அகாடமி எதிரில் உள்ள மேம்பாலத்துக்கு டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா பெயர் சூட்டப்படும்: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். படங்கள்: ம.பிரபு
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். படங்கள்: ம.பிரபு
Updated on
2 min read

சென்னை: கதீட்ரல் சாலையில் மியூசிக் அகாடமிஎதிரில் உள்ள மேம்பாலத்துக்கு ‘டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணாமேம்பாலம்’ என்று பெயர் சூட்டசென்னை மாநகராட்சி கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

இதில், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், ஆசிய ஹாக்கி போட்டி ஆகியவற்றுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு மேயர் பிரியா நன்றியும், பாராட்டும் தெரிவித்தார். சந்திரயான்-3 வெற்றிக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.

அப்போது பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், மத்திய அரசு காஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்ததற்கும் நன்றி தெரிவிக்குமாறு கோரினார். ஆனால், மத்திய அரசுக்கு மேயர் நன்றி தெரிவிக்காத நிலையில், கவுன்சிலர் உமா ஆனந்த் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாநில அரசின் செயலுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் மாமன்றம், மத்திய அரசை ஏன் பாராட்டவில்லை? சந்திரயான்-3 வெற்றிக்குப் பாராட்டு என்று கூறிய மேயர், பிரதமரையோ, மத்திய அரசையோ பாராட்டவில்லை” என்றார்.

கூட்டத்தில், கதீட்ரல் சாலையில் மியூசிக் அகாடமி எதிரில் உள்ள மேம்பாலத்துக்கு ‘டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணா மேம்பாலம்’ என்று பெயர் மாற்றம் செய்யவும், மாண்டலின் சீனிவாசன் வசித்துவந்த கோடம்பாக்கம் மண்டலம் 130-வது வார்டு குமரன் நகர் பிரதான சாலைக்கு, ‘மாண்டலின் சீனிவாசன் பிரதான சாலை’ எனவும் பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மாநகராட்சி சமுதாய நலக் கூடங்களில் ஓய்வுபெற்ற அலுவலர்களின் குடும்ப நிகழ்ச்சிக்கு 50 சதவீத சலுகைக் கட்டணத்தில் அனுமதி அளித்தல், கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு அனுமதி அளித்தல் உள்ளிட்ட 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

35-வது வார்டு மதிமுக கவுன்சிலர் ஜீவன் பேசும்போது, தனது வார்டில் நடக்கும் பணிகள் குறித்து ஒப்பந்தாரிடம் கேட்டால், ரவுடிகளைக் கொண்டு மிரட்டுவதாகப் புகார் தெரிவித்தார். 24-வது வார்டு அதிமுக கவுன்சிலர் சேட்டு மற்றும் பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவிப்பதில்லை என்று புகார் தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளித்த மேயர், ``மாநகராட்சி சார்பில் வார்டுகளில் எந்தப் பணியை மேற்கொண்டாலும், மண்டல அலுவலர்கள் மூலமாக வார்டு கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மண்டல அளவிலான பணிகள் குறித்து மண்டலக் குழுத் தலைவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்''என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கணக்குக் குழுத் தலைவர் தனசேகரன் பேசும்போது, “அதிமுக ஆட்சியில் மாநகராட்சிக்குத் தொடர்பில்லாத நபரின் வங்கிக் கணக்கில் ரூ.18 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. அதை மாநகராட்சி ஆணையர் மீட்காவிட்டால், முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்வேன். பிளீச்சிங் பவுடருக்கு ஜிஎஸ்டி வரி இல்லை. ஆனால், ரூ.27 லட்சம் ஜிஎஸ்டி செலுத்தியதாக கணக்கு காட்டியுள்ளனர். இதை ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, காலி பணியிடங்களை நிரப்புதல், பள்ளிக் கட்டிடங்களைச் சீரமைத்தல், சாலையில் மாடுகள் சுற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுத்தல், ஒப்பந்ததாரர்கள் தங்களது பணிக்கு, துணை ஒப்பந்தம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுத்தல், பழைய பாலங்களை இடித்து, புதிய பாலம் அமைக்கும் பணியில் தாமதிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர் தெரிவித்தனர்.

கூட்டத்தில் சமையல் காஸ் சிலிண்டர் விலையை<br />குறைத்ததற்கு மத்திய அரசை பாராட்டாத<br />மாமன்றத்தைக் கண்டித்து பாஜக<br />கவுன்சிலர் உமா ஆனந்த் வெளிநடப்பு செய்தார்.
கூட்டத்தில் சமையல் காஸ் சிலிண்டர் விலையை
குறைத்ததற்கு மத்திய அரசை பாராட்டாத
மாமன்றத்தைக் கண்டித்து பாஜக
கவுன்சிலர் உமா ஆனந்த் வெளிநடப்பு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in