கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்த ஏற்றதாக உருவாக்க கோரிக்கை

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்த ஏற்றதாக உருவாக்க கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: கிளாம்பாக்கத்தில் புதியதாக திறக்கப்பட உள்ள பேருந்து நிலையத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் முழுமையாக பயன்படுத்த ஏற்றதாக உருவாக்க வேண்டும் என்று தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் தோ.வில்சன், பொதுச்செயலாளர் பா.ஜான்ஸிராணி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது. இப்புதிய பேருந்து நிலையம் மாற்றுத் திறனாளிகளுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்க அரசு முயற்சிகள் எடுத்துள்ளதை அறிகிறோம். எனினும், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் முழுமையாக பயன்படுத்த ஏற்றதாக உருவாக்கப்படவில்லை என தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறிப்பாக, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொட்டுணர்ந்து செல்லும் தரை அனைத்து இடங்களுக்கும் முழுமையாக அமைக்கப்படவில்லை என்றும், செவி மற்றும் பேசும் திறன் பாதித்த மாற்றுத் திறனாளிகள் அறியும் வகையில் காட்சி அறிவிப்பு எல்லா இடங்களிலும் முழுமையாக அமைக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதவிர, கடுமையாக பாதித்த மாற்றுத் திறனாளிகள் இயன்ற அளவில் பேருந்துகளின் அருகாமையில் சென்று வாகனங்களை நிறுத்த தனி வசதி இல்லை என்றும் தெரிகிறது.

எனவே, அனைத்து துறை அதிகாரிகளை கொண்டு விரைவில் முழுமையான ஆய்வு செய்ய வேண்டும். மேலும், சட்ட விதிகளின்படி உரிய வசதிகளை இப்புதிய பேருந்து நிலையத்தில் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in