முதல்வரின் 3 அறிவிப்புகள் முதல் கோட்டாவில் தொடரும் தற்கொலைகள் வரை | செய்தித் தெறிப்புகள் 10 ஆக.28, 2023

முதல்வரின் 3 அறிவிப்புகள் முதல் கோட்டாவில் தொடரும் தற்கொலைகள் வரை | செய்தித் தெறிப்புகள் 10 ஆக.28, 2023
Updated on
2 min read

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத் தொகை: தமிழக விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையினையும் சேர்த்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,265-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,310-ம், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தனிநபர் வருமானம் உயர்வு: அமைச்சர்: "2022-23 ஆண்டில் தமிழகத்தில் தனிநபர் வருமானம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஒன்றிய அளவில் 2022-23-ல் 98 ஆயிரத்து 374 ரூபாயாக உள்ளது என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் ஏற்கெனவே ஜாமீன் கோரியிருந்த நிலையில், வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோர முடியாது. ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டார்.

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு: 2024-25-ஆம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை ரூ.5000-லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1,79,000 கடலோர மீனவ குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனை ஆராய செப்.2-ல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா-எல்1: விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவுள்ள இந்திய ஆய்வகமான ஆதித்யா-எல்1, செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், சூரியன் - பூமி அமைப்பில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி ஒன்றைச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் ஆய்வகம் வைக்கப்படும் என்றும், இந்த புள்ளியை விண்கலம் அடைய 120 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடையின்றி தொடர்ந்து சூரியனைப் பார்க்கும் வகையில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதால், அது சூரியன் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

காங்கிரஸின் பிரதமர் வேட்பாளரும் பாஜக கேலியும்: அடுத்தாண்டு நடைபெற இருக்கும் மக்களைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது, பேரழிவுக்கான பயணச் சீட்டு என்று கார்ட்டூன் வெளியிட்டு பாஜக கேலி செய்திருக்கிறது.

‘இண்டியா’ கூட்டணியில் பொறுப்பு வகிக்கும் எண்ணம் இல்லை” - நிதிஷ்: "எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவே விரும்பினேன், ‘இண்டியா’ கூட்டணியில் பொறுப்பு வகிக்கும் எண்ணமில்லை" என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திங்கள்கிழமை தெரிவித்தார். ‘இண்டியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகும் வாய்ப்பு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?’ என்று கேட்கப்பட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தொடரும் தற்கொலைகள் - கோட்டா பயிற்சி மையங்களில் அதிர்ச்சி: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் அவீஷ்கர் சாம்பாஜி கஸ்லே மற்றும் ஆதர்ஷ் ராஜ் தற்கொலை செய்து கொண்டனர். கோட்டாவில் இந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை 24 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். கோட்டா நகரில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களிலும் 3 லட்சம் மாணவர்கள் நீட், ஐஐடி ஜெஇஇ உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மொழிபெயர்க்க ரூ.3 கோடி: சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா: நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஏற்கெனவே பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. நீரஜின் இந்த சரித்திர சாதனைக்காக வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் வெள்ளியும், செக் குடியரசை சேர்ந்த யக்கூப் வெண்கலமும் வென்றனர்.

இதனிடையே, களத்தில் கலக்கியதற்காக மட்டும் அவர் பாராட்டு மழையில் நனைந்து விடவில்லை. மாறாக, இந்திய தேசியக் கொடியில் ஆட்டோகிராஃப் இட மறுத்த தனது செயலுக்காவும் அனைவரின் இதயத்தையும் அவர் வென்று வருகிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in