‘சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோர முடியாது’ - செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.15 வரை நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி | கோப்புப்படம்
அமைச்சர் செந்தில் பாலாஜி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இந்த விசாரணை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவரது காவலை ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அன்றைய தினமே, செந்தில் பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப் பத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டிருந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் கடந்த ஆக.25-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து அவரது நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி, ஆக.28-ம் தேதி, செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த சிறைத் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் ஏற்கெனவே ஜாமீன் கோரியிருந்த நிலையில், வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோர முடியாது. ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டார். மேலும், அடுத்த விசாரணைக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், காணொளி மூலம் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in