

உதகை: உதகையில் மகளிர் தயாரிக்கும் சாக்லேட்கள் இந்தியாவின் சிறு, குறு நிறுவனங்களின் பெரும் ஆற்றலுக்கு சான்றாகும் என ராகுல் காந்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 12-ம் தேதி நீலகிரி மாவட்டம் வந்தார். உதகை அருகே எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார். அங்கு, பெண்கள் சாக்லேட் தயாரிப்பதை பார்வையிட்டதுடன், அவர்களுடன் இணைந்து சாக்லேட் தயாரித்தார். இதுதொடர்பான வீடியோவை, ட்விட்டரில் ராகுல் நேற்று பகிர்ந்தார்.
ராகுல் காந்தி சாக்லேட் தயாரிக்க ஏற்பாடு செய்தது உதகையில் உள்ள மூடிஸ் சாக்லேட் நிறுவனம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் முரளிதர் ராவ் கூறியதாவது: உதகையில் உள்ள எங்கள் சாக்லேட் நிறுவனத்துக்கு ராகுல் காந்தி வருவதாக இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக சாக்லேட் தயாரிப்புக்கான ஏற்பாடுகளை எல்லநள்ளியில் உள்ள விடுதியிலேயே செய்தோம்.
அங்கு ராகுல் காந்தி, எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 70 பெண் தொழிலாளர்களுடன் இணைந்து சாக்லேட் தயாரித்தார். பெண்களின் உழைப்பை வெகுவாக பாராட்டினார். அப்போது அவர் எங்களிடம் இந்த துறைக்கு என்ன உதவி தேவை என கேட்டார். சிறு, குறு நிறுவனங்களை மேலும் ஊக்கமளித்தால், வேலை வாய்ப்புகள் பெருகும் என கூறினோம்.
சாக்லேட் தயாரிப்பு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி பற்றி அவர் கேட்டறிந்தார். இவ்வாறு முரளிதர் ராவ் கூறினார்.
இந்நிலையில், மூடிஸ் சாக்லெட்டுகளின் கதை இந்தியாவின் சிறு, குறு நிறுவனங்களின் பெரும் ஆற்றலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சான்றாகும் என அந்த ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.