

உடுமலை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கனிம வள திருட்டை தடுக்க முடியாததால், ஊராட்சி மன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மடத்துக்குளம் அடுத்த ராமேகவுண்டன் புதூரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர், மெட்ராத்தி ஊராட்சியில் 8-வது வார்டு உறுப்பினராக உள்ளார். இவர் தனது பதவியை ராஜினாமா செய்து அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, "மெட்ராத்தி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்றுவரும் கிராவல் மண் உள்ளிட்ட கனிம வள கொள்ளையை தடுக்க முயன்றேன். ஆனால் என்னால் முறைகேட்டை தடுக்க முடியவில்லை. என் மீது பொய் வழக்கு போடுவதாக சிலர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளில் பொதுமக்களின் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுக்காக ஊராட்சி மன்றத்தில் கோரிக்கை விடுத்தும், எந்த வித நலத்திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. எனவே, எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். ராஜினாமா கடிதத்தை மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளேன்" என்றார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஷெல்டன் கூறும்போது, "வார்டு உறுப்பினரின் ராஜினாமா கடிதம் பெறப்பட்டுள்ளது. அந்த கடிதம் முறைப்படி மேல் நடவடிக்கைக்காக ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சியர் தான் முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட முடியும்" என்றார்.