தீர்ப்பில் மகிழ்ச்சி... ‘கோடநாடு’ விவகாரத்தில் கொந்தளிப்பு... இபிஎஸ் ரியாக்‌ஷன்ஸ் | செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.25, 2023

தீர்ப்பில் மகிழ்ச்சி... ‘கோடநாடு’ விவகாரத்தில் கொந்தளிப்பு... இபிஎஸ் ரியாக்‌ஷன்ஸ் | செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.25, 2023
Updated on
3 min read

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை திருக்குவளை பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “வாழ்வின் ஒரு பொன்னாள் என சொல்லக்கூடிய வகையில் இந்த நாள் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த திருக்குவளை மண்ணில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த தொடக்கப் பள்ளியில் இந்த சிறப்பான திட்டத்தை விரிவாக்கம் செய்து வைப்பதில் பெருமை கொள்கிறேன்.

கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் அன்று மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தேன். இப்போது அதை அனைத்து பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்துள்ளோம். சுமார் 17 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன் பெறுகின்றனர்” என்று தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு: நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த புதிய அமர்வில் காவிரிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "காவிரி மேலாண்மை ஆணையம் 15 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அந்த உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்தி இருக்கிறதா என்பது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்: உயர் நீதிமன்றம்: கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது ஓபிஎஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இதனிடையே "அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, நீதிக்கும், உண்மைக்கும், தர்மத்துக்கு கிடைத்திருக்கக்கூடிய தீர்ப்பு. எங்கள் பக்கம் நியாயம் இருந்தது. எனவே, நியாயப்படி எங்களுக்கு தீர்ப்பு கிடைத்துள்ளது" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதேவேளையில், "கனகராஜை ஜெயலலிதாவின் ஓட்டுநர் என இனி யாரும் சொல்லக் கூடாது. அவர் சசிகலாவின் ஓட்டுநராக இருந்தவர். ஜெயலலிதாவின் ஓட்டுநர் எனக் கூறினால் நீதிமன்றத்தின் வழியாக வழக்கு தொடர்வோம். ஜெயலலிதாவுக்கு கனகராஜ் ஒருநாள் கூட ஓட்டுநராக இல்லை" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை முறையாக விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் கூறியுள்ளார். மேலும், “அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில்தான் கோடநாடு கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக எனது தம்பி ஏற்கெனவே என்னிடம் தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை போலீஸார் அது சம்பந்தமாக என்னை அழைத்து விசாரிக்கவில்லை. என்னை விசாரணைக்கு அழைத்தால் உரிய தகவல்களை சிபிசிஐடி போலீஸிடம் அளிப்பேன். முதல்வரை சந்திக்கவும் தயாராக உள்ளேன்” என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை நீட்டித்த எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்த சிறைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

“தேமுதிகவில் எந்த தொய்வும் இல்லை” - பிரேமலதா: தனது பிறந்தநாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த், தேமுதிக தொண்டர்களை சந்தித்தார். இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு விருந்து வழங்கப்பட்டது. தனது மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள ‘படைத் தலைவன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் வெளியிட்டார்.

பின்னர் பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது, "தேமுதிகவில் எந்தத் தொய்வும் இல்லை. விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். கட்சித் தொண்டர்கள், அவரது உடல்நிலை குறித்து ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும், யாரும் எதற்கும் கவலைப்படாதீர்கள். விஜயகாந்த் நம்முடன் நூறாண்டு காலம் நிச்சயம் இருப்பார்" என்றார்.

‘ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு ஆபத்தானது’: “ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை 2020-க்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதனை நிறுத்தி வைத்து, அது தொடர்பான வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இப்போது அந்த வல்லுநர் குழு நீண்ட சில நூறு பக்கங்கள் கொண்ட அறிக்கையை பரிந்துரைகளுடன் வெளியிட்டுள்ளது. இதில் பள்ளிக் கல்வி நிலையில் ஆண்டுக்கு இரு பொதுத் தேர்வு என்ற புதிய தேர்வு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரு முறை தேர்வில் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதை மாணவர்கள் அடுத்த நிலைக்கு செல்ல பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு, பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்துவது ஆபத்தானது” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் சீன ஆக்கிரமிப்பு குறித்து பேசிய ராகுல்: லடாக்கில் ஓர் அங்குலம் நிலம் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பொய். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் அவ்வாறு சொன்னது வருத்தமளிக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லடாக் சென்றுள்ள அவர் அங்கு நடந்த பேரணி ஒன்றில் பேசும் போது இதனைத் தெரிவித்தார்.

ராகுல் காந்தி இந்தப் பேச்சுக்குபதிலடி கொடுக்கும் விதமாக, சீனா உடனான காங்கிரஸின் உறவு குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து பாஜக மாநிலங்களவை எம்.பி.யும், அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான டாக்டர் சுதன்ஷு திரிவேதிரி கூறுகையில், "ராகுல் காந்தி ஏன் சீனாவின் மீது இவ்வளவு அன்பினை வெளிப்படுத்துகிறார் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பண உதவி கிடைத்ததாலா?” என்று கேள்வி எழுப்பினார்.

சூதாட்ட விளம்பரங்கள் கூடாது: மத்திய அரசு எச்சரிக்கை:சூதாட்டம் குறித்த நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களை அனுமதிக்க வேண்டாம் என்று ஊடக நிறுவனங்களுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதைக் கடைபிடிக்கத் தவறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“வெங்காய ஏற்றுமதிக்கான வரி உயர்வை ரத்து செய்க”: வெங்காய ஏற்றுமதிக்கான 40 சதவீத வரியை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மேலும், இடுபொருள்களின் செலவுகளை கருத்தில் கொண்டு வெங்காய உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் கடமையாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

88.77 மீ. ஈட்டி எறிந்து அசத்திய நீரஜ் சோப்ரா: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 88.77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இதன்மூலம், 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் அவர் தகுதி பெற்றார். இதனிடையே, மற்றொரு இந்திய வீரரான டி.பி.மானுவும் உலகத் தடகள இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in