Published : 25 Aug 2023 03:00 PM
Last Updated : 25 Aug 2023 03:00 PM
புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 88.77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இதனால், அவர் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு மென்மேலும் வலுத்துள்ளது. இதனிடையே, மற்றொரு இந்திய வீரரான டி.பி.மானுவும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் இன்று தொடங்கியது. வரும் 27-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்று இன்று நடந்தது. இதில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தன் முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இதன்மூலம் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் அவர் தகுதி பெற்றார்.
88.77 மீட்டர் என்பது நீரஜ் சோப்ராவுக்கு நடப்பு சீசனில் சொந்த சாதனை தூரம் ஆகும். உலக தடகள சாம்பியன்ஷிப்பை பொறுத்தவரையில், தகுதிச் சுற்றில் 83 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்தால் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக முன்னேறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட நீரஜ் சோப்ரா, ஞாயிற்றுக்கிழமை 12 பேர் பங்கேற்கும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி.பி.மானுவும் இறுதிக்கு தகுதி: ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான டி.பி.மானுவும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். தகுதிச் சுற்றில் 81.31 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்த டி.பி.மானு, குரூப் ஏ பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
சரித்திர சாதனை நோக்கி நீரஜ் - 25 வயதான நீரஜ் சோப்ரா, 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம், 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கம், அதே ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்று அசத்தினார். கடந்த ஆண்டு டைமண்ட் லீக்கிலும் சாம்பியன் பட்டம் வென்றார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மட்டுமே நீரஜ் சோப்ரா இதுரை தங்கம் வெல்லவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது சிறந்த ஃபார்மில் இருப்பதால் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களில் முதன்மையான வீரராக திகழ்கிறார்.
இம்முறை நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றால், துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார்.
2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றிருந்தார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிபர் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். இதன் பின்னர் அவர், 2006 -ம் ஆண்டு ஜாக்ரெப்பில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தி இருந்தார்.
நீரஜ் சோப்ரா இந்த சீசனில் இரண்டு உயர்தரப் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். அவை இரண்டிலும் தங்கம் வென்றிருந்தார். தோஹா மற்றும் லாசனே நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் அசத்திய அவர், அதன் பின்னர் இரு மாத இடைவெளிக்கு பின்னர் தற்போது முழுவீச்சில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு நீரஜ் சோப்ரா கூறும்போது, “உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு எதிராக மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிடுவது மற்றும் நிலையான செயல் திறனை வெளிப்படுத்துவது நிச்சயமாக சவாலானதுதான். நான் எனது சிறந்ததைக் கொடுக்க விரும்புகிறேன், அது நடந்தால், நான் முன்பை விட நன்றாக வருவேன்” என்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT