திருப்போரூர் | மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகளை 7 பேருக்கு பொருத்த முடிவு

திருப்போரூர் | மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகளை 7 பேருக்கு பொருத்த முடிவு
Updated on
1 min read

திருப்போரூர்: மடையத்தூர் அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகளை 7 பேருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

​மாமல்லபுரத்தை அடுத்த வடகடம்பாடி கிராமத்தை சேர்ந்த ஏகாம்பரத்தின் மகன் மணிகண்டன் (28). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. மணிகண்டன் அக்ரி டிப்ளமோ படிப்பு முடித்து விட்டு கரும்பாக்கம் கிராமத்தில் உரங்கள், வேளாண் பூச்சி மருந்துகள், விதைகள் விற்பனை செய்யும் கடையை சொந்தமாக நடத்தி வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் வடகடம்பாடியில் இருந்து கரும்பாக்கத்துக்கு வருவார்.

இதேபோல், கடந்த 20-ம் தேதி மோட்டார் சைக்கிளில் மடையத்தூர் அருகே சென்றபோது உத்தரமேரூரை அடுத்த வாடாதவூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு (31) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவிலம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மணிகண்டன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து திருப்போரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து மணிகண்டனின் தந்தை ஏகாம்பரம், தாய் அஞ்சலை, மனைவி ஹேமலதா, சகோதரர் உதயகுமார் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று மணிகண்டனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து மருத்துவக் குழுவினர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தகவல் தெரிவித்து 2 இதய வால்வுகள், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள், கல்லீரல் ஆகிய உடல் உறுப்புகளை 7 பேருக்கு பொருத்த முடிவு செய்து அதற்கான அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in