

சென்னை: இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சல பிரதேச நிவாரணப் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேச மாநிலம், மழை வெள்ளம், நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங், நேற்று காலை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேரிடரால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும்மீட்புப் பணிகள் குறித்த விவரங்களை தெரிவித்தார்.
இமாச்சல் முதல்வருக்கு கடிதம்: இதையடுத்து, அந்த மாநில நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து இமாச்சலப் பிரதேச முதல்வருக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடரால் மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் ஏற்பட்டுள்ள கடும் சேதங்கள் என்னை மிகுந்த வருத்தத்துக்கும் வேதனைக்கும் ஆளாக்கியுள்ளது. மிகவும் நெருக்கடியான இந்தச் சூழலில் மீட்பு, நிவாரணப் பணிகளை திறமையாக மேற்கொண்டு வருவதற்காக தங்களை பாராட்டுகிறேன்.
அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.10 கோடி வழங்குகிறேன். பாதிக்கப்பட்ட இமாச்சலபிரதேசத்துக்கு உதவ தமிழக அரசும், தமிழக மக்களும் எப்போதும் தயாராக இருக்கிறோம். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.