தமிழக தேர்தல் 2026-ல் ‘நோட்டா’வில் பதிவான வாக்குகளும் தாக்கமும் - ஒரு பார்வை

தமிழக தேர்தல் 2026-ல் ‘நோட்டா’வில் பதிவான வாக்குகளும் தாக்கமும் - ஒரு பார்வை
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் 11 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.

இதில், 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைக்க தயாராகியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் முதல் தேர்தலிலேயே 34.92 சதவீதத்துடன் 1,72,26,209 வாக்குகள் பெற்று அதிரடி திருப்பம் தந்திருக்கிறது.

இதில், திமுக 24.19 சதவீதத்துடன் 1,19,29,144 வாக்குகள், அதிமுக 21.21 சதவீதத்துடன் 1,04,62,146 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 4 சதவீதத்துடன் 19,72,537 வாக்குகள் பெற்றுள்ளன.

இந்த முறை நான்கு முனைபோட்டி நிலவியதால் பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் குறைந்துள்ளது. 97 தொகுதிகளில் 10 ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில், நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளை விட குறைவான வாக்கு வித்தியாசத்தில் 11 வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

அதன்படி, கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் தவெக வேட்பாளர் அருள் விக்னேஷ் 798 வாக்கு வித்தியாசத்திலும் (நோட்டா 883 வாக்குகள்), கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் என்.தளவாய் சுந்தரம் 214 வாக்குகள் வித்தியாசத்திலும் (நோட்டா 825 ) குளித்தலை தொகுதியில் திமுக வேட்பாளர் சூரியன் அ.சந்திரன் 579 வாக்குகள் வித்தியாசத்திலும் (நோட்டா 612), கும்பகோணம் தொகுதியில் தவெக வேட்பாளர் வினோத் 679 வாக்குகள் வித்தியாசத்திலும் (நோட்டா 960) வெற்றி பெற்றுள்ளனர்.

இதேபோல, பழநி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ரவி மனோகரன் 693 வாக்குகள் வித்தியாசத்திலும் (நோட்டா 750), பரமத்திவேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.சேகர் 308 வாக்குகள் வித்தியாசத்திலும் (நோட்டா 449), போளூர் தொகுதியில் தவெக வேட்பாளர் அபிஷேக் 227 வாக்குகள் வித்தியாசத்திலும் (நோட்டா 798), திருக்கோவிலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பழனிசாமி 285 வாக்குகள் வித்தியாசத்திலும் (நோட்டா 500), திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் ரா.சீனிவாசசேதுபதி 1 வாக்கு வித்தியாசத்திலும் (நோட்டா 739), உதகமண்டலம் தொகுதியில் பாஜக வேட்பாளர் மு.போஜராஜன் 976 வாக்குகள் வித்தியாசத்திலும்(நோட்டா 1,525), வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக வேட்பாளர் பி.எஸ்.சீனிவாசன் 138 வாக்குகள் வித்தியாசத்திலும் (நோட்டா 1,570) வெற்றி பெற்றுள்ளனர்.

குறைந்து வரும் நோட்டா:

நோட்டா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தமிழகத்தில் 2016 பேரவைத் தேர்தலில் 5,61,244 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானது. இது 1.3 சதவீதமாகும். பின்னர், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 3,45,538 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் 1,99,801 ஆக குறைந்துள்ளது.

தமிழக தேர்தல் 2026-ல் ‘நோட்டா’வில் பதிவான வாக்குகளும் தாக்கமும் - ஒரு பார்வை
தவெகவின் ‘இன்ஸ்டன்ட்’ வெற்றிக்கு வித்திட்ட இன்ஸ்டாகிராம் - பெரிய கட்சிகளை காவு வாங்கிய ‘அல்காரிதம்’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in